×

மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் 3 மாநில பா.ஜ முதல்வர்கள் யார்?.. மோடி தலைமையில் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை

புதுடெல்லி: மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் அங்கு புதிய முதல்வர்களை தேர்வு செய்ய முடியாமல் பா.ஜ தவித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் 4 மணி நேரம் ஆலோசனை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜ ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அம்மாநிலத்தின் முதல்வர்கள் யார் என்பது குறித்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது. தெலங்கானாவில் காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஆனால் பா.ஜ சார்பில் இதுவரை முதல்வர் தேர்வு நடக்கவில்லை. புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் மற்றும் மேலிட பார்வையாளர் பட்டியல் ஆகியவையும் பா.ஜ வெற்றி பெற்ற 3 மாநிலங்களுக்கும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் மூன்று மாநில முதல்வர்களையும் தேர்வு செய்யும் பொருட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் இரவு பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், 3 மாநிலங்களில் முதல்வரின் பெயர் மற்றும் எதிர்கால வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்திலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் பட்டியலில் வசுந்தரா ராஜேவின் பெயர் உள்ளது. இரண்டு முறை முதல்வராக இருந்தவர். ஆனால், தற்போது கட்சியின் தேசியத் தலைமையுடனான அவரது உறவு மிகவும் சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தியாகுமாரி அல்லது கிரோடி லால் மீனா உள்ளிட்டோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் அங்கு உள்ளனர். ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூட ராஜஸ்தான் முதல்வராகலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. சட்டீஸ்கரிலும் முன்னாள் முதல்வர் ராமன்சிங்கிற்கு வாய்ப்பு வழங்க பா.ஜ தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் எம்பி பதவியில் இருந்த விலகும் அருண் சாவோ, ஓபிசி மற்றும் பட்டியல் பழங்குடியினராக வரும் கோமதி சாய் ஆகியோரை முதல்வராக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பிரலாத் படேல், கைலாஷ் விஜய்வர்கியாவின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி, முதல்வர்களின் தேர்வு இருக்கும். இன்று அல்லது நாளைக்குள் முதல்வர்கள் பட்டியல் வெளியாகும்’ என்று பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் முதல்வர் நியமனத்தில் அதிரடி மாற்றம் மூலம் தேசிய அளவில் கட்சி நிர்வாகிகளுக்கு பா.ஜ சொல்லும் செய்தியாக இதைக்கருதலாம் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எம்எல்ஏக்களாக தேர்வான 10 பாஜ எம்பிக்கள் ராஜினாமா
சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பாஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜ கட்சி சார்பில் 21 எம்பிக்கள் போட்டியிட்டனர். இவர்களில் 12 பேர் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இவர்களில் 10பேர் நேற்று தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களில் ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல் மற்றும் எம்பிக்கள் தியாகுமாரி, ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ராகேஷ் சிங், உதயபிரதாப் சிங், ரிதிபதக், கிரோடி லால் மீனா, கோமதிசாய், அருண் சாவோ உட்பட 9 பேர் மக்களவை எம்பிக்கள், ஒருவர் மாநிலங்களவை எம்பி. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய அமைச்சர்கள் ரேணுகா சிங் மற்றும் மகாந்த் பாலக்நாத் ஆகியோரும் மக்களவையில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர்கள் அனைவரும் புதிதாக அமைய உள்ள மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் அரசில் இணைய வேண்டும் என்று பா.ஜ தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பி பதவியை ராஜினாமா செய்த ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

The post மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தான் 3 மாநில பா.ஜ முதல்வர்கள் யார்?.. மோடி தலைமையில் 4 மணி நேரம் ஆலோசனை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை appeared first on Dinakaran.

Tags : Mabi ,Chhattisgarh ,Rajasthan 3 State Pa ,Modi ,New Delhi ,Rajasthan ,Dinakaran ,
× RELATED மபியில் வாகனம் கவிழ்ந்து 14 பேர் பலி