புதுடெல்லி: கடந்த 2018ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் நக்சல் தீவிரவாதம் தொடர்பான வன்முறை சம்பவங்கள் 36 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், ‘கடந்த 2018ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் நக்சல் தீவிரவாதம் தொடர்பான வன்முறை சம்பவங்கள் 36 சதவீதம் குறைந்துள்ளது.
நக்சல் கும்பல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை 59 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. சட்டீஸ்கரில் நக்சல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் 22 சதவீதமும், இறப்பு எண்ணிக்கை 60 சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த 2010ல், இத்தகைய தாக்குதல்கள் அதிகமாக இருந்தன. 2022ல் 76 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 2020ல் நக்சல் வன்முறைசம்பவங்கள் நடந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 96 ஆக இருந்தது. 2022ல் 45 ஆக குறைந்துள்ளது. நக்சல் தீவிரவாதத்தை அழிக்க தேவையான பாதுகாப்பு படை, ஆயுதங்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளை ஒருங்கிணைக்க தேவையான உதவிகளை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு செய்து வருகிறது. மேலும், நக்சல் பாதித்த பகுதிகளில் சாலைகள், மொபைல் டவர்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், காவல் நிலையங்கள் போன்றவற்றை அமைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகிறது’ என்றார்.
The post 2018ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் நக்சல் தீவிரவாதம் 36% குறைந்துள்ளது: ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.
