சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது.
குறிப்பாக கடந்த 3ம் தேதி நள்ளிரவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று முன்தினம் வரை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. இதனால் 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். நேற்று புயல் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று முழுவதும் மழை பெய்யவில்லை. இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் புறநகர் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இன்று இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள மக்களுக்கு இந்திய விமானப்படை மூலம் நிவாரண பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உணவுப் பொட்டலங்களுடன், மருத்துவ வசதி தேவைப்பட்டால் அதுவும் செய்து தரப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
The post சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் தொடங்கியது! appeared first on Dinakaran.
