×

‘ரா’ பிரிவில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

திருச்சி: உளவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சியை சேர்ந்த பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த போலி ஐஏஎஸ் அதிகாரியை திருச்சி போலீசார் கைது செய்தனர்.திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் சின்னக்கண்ணு தோப்பை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி(45). ஸ்ரீரங்கம் மாணிக்கம்பிள்ளை தெருவில் ஜெராக்ஸ்கடை நடத்தி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வடமுகம் சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(41). இவர், கிருஷ்ணவேணியின் ஜெராக்ஸ் கடைக்கு 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தார். அப்போது தன்னை ஐஏஎஸ் அதிகாரி என கிருஷ்ணவேணியிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். இதைத்தொடர்ந்து, அவரது கடைக்கு பிரகாஷ் வந்து சென்றதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது கிருஷ்ணவேணியின் மகனுக்கு இந்திய உளவுப்பிரிவான ‘ரா’ பிரிவில் (ரிசர்ஜ் அனலைஸ் விங்க்) வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களையும் காண்பித்துள்ளார். இதை நம்பிய கிருஷ்ணவேணி, 2021ம் ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியவாறு வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் இழுத்தடித்து வந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணவேனி திருச்சி மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ், போலி ஐஏஎஸ் அதிகாரி என்பதும், சிதம்பரம் வைகை நகர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் சிதம்பரம் சென்ற போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.

The post ‘ரா’ பிரிவில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Trichy ,Dinakaran ,
× RELATED போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம்...