![]()
பெரம்பூர்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை மற்றும் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக வடசென்னை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரம்பூர், திரு.வி.க நகர், கொளத்தூர், புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, புளியந்தோப்பு கே.பி.பார்க், அங்காளம்மன் கோயில் தெரு, பட்டாளம் சந்திப்பு, ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை, ஜமாலயா, மங்களபுரம், பெரம்பூர் பி.பி.ரோடு, வியாசர்பாடி, கன்னிகாபுரம், முல்லை நகர், எம்.கே.பி.நகர், கல்யாணபுரம், கொடுங்கையூர், அபிராமி அவன்யூ. சின்னாண்டி மடம், கொளத்தூர் பெரியார் நகர், பெரவள்ளூர், பாலாஜி நகர், செந்தில் நகர், குமரன் நகர், பூம்புகார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
மேற்கண்ட இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள், பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், தண்ணீர் அதிகம் சூழ்ந்த பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்டு சமூக நலக்கூடங்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர்: மணலியில் தாழ்வான பகுதிகளான சடையன்குப்பம், இருளர் காலனி, கடப்பாக்கம், குளக்கரை, காமராஜபுரம், கொசப்பூர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்து, பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். பாதிக்கப்பட்டவர்களை மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மணலி காமராஜர் சாலை, எம்.எப்.எல் சந்திப்பு, மாத்தூர் ஏரி போன்ற பகுதிகளை சுற்றி, இடுப்பளவிற்கு வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மண்டல குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகித்தனர். மேலும், அனைவருக்கும் உணவு வழங்கினர். அவின் நிறுவனத்திலிருந்து சுமார் 22 ஆயிரம் பால் பாக்கெட்கள் லாரிகள் மூலம் வரவழைக்கப்பட்டு, மணலி மண்டலத்தின் 8 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. தண்டையார்பேட்டை: சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலை, வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர், செரியன் நகர், துறைமுகம் குடியிருப்பு, புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது, மேலும், கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தரை தளத்தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
The post வடசென்னையில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் மீட்பு பணியில் மாநகராட்சி, தீயணைப்பு வீரர்கள் appeared first on Dinakaran.
