சென்னை: சென்னையில் 2015ல் பெய்த மழையைவிட தற்போது ஒன்றரை முதல் இரண்டு மடங்கு மழை கூடுதலாக பெய்துள்ளது என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறினார்.தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று அளித்த பேட்டி: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியை சேமித்து வைக்க முடியும். அந்த ஏரியில் தற்போது 23.5 அடி தண்ணீர் உள்ளது. இதில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி திறந்து விடப்படுகிறது. மற்ற பகுதிகளில் இருந்தும் அடையாறு ஆற்றில் தண்ணீர் கலக்கிறது. கூவம் ஆற்றிலும் தண்ணீர் குறைந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதையும் குறைத்துள்ளோம்.
கடந்த 2 நாட்களில் 32,158 பேர் பாதுகாப்பு நிவாரண மையங்களில் தங்க வைத்துள்ளோம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் நேற்று 3.25 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கி இருக்கிறோம். நேற்று மாலை வரை 85 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீர் வடிய வடிய மின்சாரம் வழங்கப்படும். நேற்று காலை பால் விநியோகத்தில் சில தாமதங்கள் இருந்தது. ஆவின் தரப்பில் அதை சரி செய்துவிட்டோம். மாநகராட்சி மூலமாக 1.26 லட்சம் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மடிப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் தான் அதிகளவில் மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு முந்தைய நாள் 29 செ.மீ. மழை பெய்துள்ளது. இரண்டு நாளில் மட்டும் 73 செ.மீ. மழை பெய்துள்ளது. வரலாற்றில் இதுபோன்று நாம் கேள்விப்படவில்லை. மழை காலத்தில் 3 மாதம் மட்டும் மொத்தமாக 60 செ.மீ. மழை பெய்யும். அதைவிட அதிகமாக கடந்த 2 நாளில் மழை பெய்துள்ளதால் கட்டாயம் பாதிப்பு ஏற்படும்.
2015ம் ஆண்டு பெய்த மழை தென்சென்னை பகுதியில் மட்டும்தான் பெய்தது. அது வெறும் மழை மட்டும்தான். தற்போது புயலுடன் மழையும் சென்னை நகர் முழுவதும் பெய்துள்ளது. புயல் வரும்போது கடல் மட்டம் ஒன்றரை மீட்டரில் இருந்து 2 மீட்டர் அலை இருக்கும். இதனால் கடல் மட்டம் உயரும். அப்போது ஆற்றில் இருந்து தண்ணீரை கடல் உள்வாங்காது. நேற்று கடல் தண்ணீரை உள்வாங்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் விரைவில் சகஜநிலைக்கு வர வேண்டும் என்றுதான் அரசு முயற்சி செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் தண்ணீரை அகற்றிய பிறகுதான் திறக்கப்படும். அதனால்தான் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மக்கள் படிப்படியாக சகஜநிலைக்கு திரும்புகிறார்கள் 2015ல் பெய்ததைவிட இரு மடங்கு கூடுதலாக மழை பெய்துள்ளது: தலைமை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.
