×

சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்தினார்’ போக்சோவில் சிக்கிய வாலிபர் தற்கொலை: பரபரப்பு தகவல்கள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் சுகன் (22). கணவனை இழந்த பாரதி தற்போது கோயம்புத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தில் மகனுடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியுடன் சுகனுக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கமுள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்திற்கு அந்த சிறுமியை சுகன் அழைத்து வந்து விட்டார். சிறுமியை காணாமல் திடுக்கிட்ட அவரது பெற்றோர், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரித்ததில், சிறுமியுடன் ஊத்துப்பள்ளத்தில் சுகன் குடும்பம் நடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த மாதம் (நவம்பர்) 5ம் தேதி அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், தர்மபுரி மாவட்ட காவல்துறை உதவியுடன் சிறுமியை மீட்டுச் சென்றனர். அவருக்கு 18 வயது பூர்த்தியடையாததால் மாயமான வழக்கு மாற்றப்பட்டு, சுகன் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. இதனை அறிந்த சுகன் போலீசுக்கு பயந்து 7.11.23ல் விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை தாய் பாரதி மீட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே சுகன் உயிரிழந்தார். இதையடுத்து, ஊத்துப்பள்ளத்திற்கு உடலை கொண்டு வந்துள்ளார்.

இதனை அறிந்து தாதனூரில் வசித்து வரும் சுகனின் தந்தை வழி தாத்தா வேடியப்பன் அதிர்ச்சிக்குள்ளானார். உடனே, உறவினர்களுடன் ஊத்துப்பள்ளம் விரைந்து சென்று சுகனின் உடலை மீட்டு சென்றார். பின்னர், இறுதிச்சடங்கு செய்து 8.11.23ம் தேதி தாதனூர் மயானத்தில் சுகன் உடலை புதைத்துள்ளனர். பேரன் சுகனின் காதல் விவகாரம் மற்றும் சாவுக்கான காரணம் குறித்து வேடியப்பனுக்கு எதுவும் தெரியாத நிலையில், இறப்பு சான்றிதழ் கேட்டு ராமியனஅள்ளி விஏஓ ஜெயசுதாவை அணுகியுள்ளார். உயிரிழந்தது ஓரிடம், புதைத்தது மற்றொரு இடம் என்பதால், சுகன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் விஏஓ புகார் தெரிவித்தார்.

விசாரணையின்போதுதான், உயிரிழந்த சுகன் மீது போக்சோ வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, விஏஓ புகாரின் அடிப்படையில் சுகன் உடலை தோண்டி எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று சுகன் உடலை புதைத்த இடத்தை பாரதி, வேடியப்பன் ஆகியோர் அடையாளம் காட்டினர்.தொடர்ந்து அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு சுகனின் உடல் அங்கேயே மீண்டும் உடல் புதைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்தினார்’ போக்சோவில் சிக்கிய வாலிபர் தற்கொலை: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Bharti ,Dadanur ,Kaduur ,Dharmapuri district ,Sugan ,Pocso ,Dinakaran ,
× RELATED வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நெல்லை...