×

தெலங்கானா முதல்வர் பதவிக்கு 6 பேர் கடும் போட்டி: எம்எல்ஏக்களுடன் கார்கே பேச்சுவார்த்தை

திருமலை: தெலங்கானா முதல்வர் பதவிக்கு 6 பேர் கடும் போட்டியில் உள்ளதால் அவர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண திட்டமிட்டுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 65 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கவர்னருக்கு அனுப்பினார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த்ரெட்டி தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில் நேற்று மாலை ஐதராபாத் தனியார் ஓட்டலில் தெலங்கானா காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மேலிட உத்தரவின்பேரில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஏஐசிசி பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒருமனதாக முதல்வரை தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. முதல்வர் பதவி தனக்கே வேண்டும் என ரேவந்த்ரெட்டி, பட்டி விக்ரமார்கே, மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார், கோமட்ரெட்டி, வெங்கட்ரெட்டி, தர்ரெட்டி ஆகிய 6 பேரும் பிடிவாதமாக உள்ளனர். இவர்களிடம் டி.கே.சிவக்குமார் தனித்தனியாக பேசினார். ஆனால் மேற்கண்ட 6 பேரில் ஒருவருக்கு முதல்வர் பதவி, 3 துணை முதல்வர் பதவி, 1 சபாநாயகர், 1 துணை சபாநாயகர் பதவி வழங்கி பிரச்னையை சரிக்கட்ட திட்டமிட்டார்.

ஆனால் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் 6 பேரும் முதல்வர் பதவியை மட்டுமே குறி வைத்து பேசினர். குறிப்பாக துணை முதல்வர் பதவியையும் ஒருவருக்கு மட்டுமே வழங்கினால்தான் அது பவுர்புல் பதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.அதேபோல் சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பதவிக்கு 6 பேரில் ஒருவரும் முன்வரவில்லை. இதனால் சுமார் 3 மணி நேரம் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ஆலோசனைக்கூட்டத்தில் நடந்த விவரங்களை கட்சியின் மேலிடத்திற்கு டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். அதன்பின்னர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இப்பிரச்னையை தீர்ப்பார் எனக்கூறிவிட்டு நேற்றிரவு டி.கே.சிவக்குமார் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.இந்நிலையில் இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் தெலங்கானா எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது முதல்வர் பதவியை பெற அழுத்தம் கொடுத்துவரும் 6 பேரிடம் அவர் தனித்தனியாக பேசுவார் என்றும், அதன்பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மீண்டும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண முயற்சி மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.தெலங்கானா முதல்வரை சுமூகமாக தேர்வு செய்ய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை கட்சி மேலிடம் நேற்று காலை அனுப்பி வைத்தது. அவர் முதல்வரை தேர்வு செய்து நேற்றிரவே பதவி ஏற்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் முதல்வர் பதவிக்கு 6 பேரிடையே கடும் போட்டி நிலவுவதால் முதல்வரை தேர்வு செய்து விரைவில் பதவி ஏற்பு விழாவை நடத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.

The post தெலங்கானா முதல்வர் பதவிக்கு 6 பேர் கடும் போட்டி: எம்எல்ஏக்களுடன் கார்கே பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,Gharke ,Tirumala ,Congress ,Mallikarjuna Kharge ,Chief Minister of ,
× RELATED 200 யூனிட் இலவச மின்சாரம், ₹500க்கு சமையல்...