×

அண்ணா, ஈவெரா, காமராஜர் சென்னையின் இதயமான சாலைகளிலும் வெள்ளம்

சென்னை: அண்ணாசாலை, ஈவெரா நெடுஞ்சாலை, காமராஜர் சாலை என சென்னையின் இதயப்பகுதியான சாலைகள் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தன. வாகனங்கள் இயங்காததால் பாதிப்புகள் குறைவாக இருந்தன. சென்னை நகரின் இதய பகுதியான சாலையாக கருதப்படுபவை அண்ணாசாலை. அதன் இரு பக்கத்திலும் ஈவெரா நெடுஞ்சாலை, காமராஜர் சாலைகள் உள்ளன. சென்னையில் கடந்த 47 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் மழை நேற்று பெய்துள்ளது. அதாவது 2015ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெய்த மழையை விட அதிகமான அளவில் சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பியிருந்தன.

மேலும் நிலத்தடி நீரும் அதிகரித்திருந்தது. மேலும் கடல் கொந்தளிப்பாக இருந்ததாலும், ராட்சத அலைகள் உருவாகியிருந்ததாலும், அடையாறு, கூவம் ஆறுகளில் இருந்து தண்ணீர் கடலுக்குள் செல்லும்போது, அவை மீண்டும் ஆறுகளுக்குள் திரும்பும் நிலை உருவானது. இதனால் நகரின் பல பகுதிகளில் இருந்து ஆறுகளுக்கு செல்லும் பகுதிகளில் தண்ணீர் வெளியேற முடியாமல் நகருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நகரின் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பல அடி உயரம் தேங்கியிருந்தது. குறிப்பாக அண்ணாசாலையிலும் இதுவரை இல்லாத அளவாக தண்ணீர் தேங்கியிருந்தது. ஈவெரா சாலைகளில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. காமராஜர் சாலையில்தான் தண்ணீர் தேங்காமல் இருந்தது.

ஆனால் அடையாறில் இருந்து கிண்டி வரை செல்லும் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதோடு நகருக்குள் பல சாலைகள் மூழ்கியிருந்தன. இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள், ஒவ்வொரு தெருவுக்கும் சென்று திரும்பி, திரும்பி ஒரே தெருவுக்கு வந்து நிற்கும் நிலை உருவானது. இதனால் பக்கத்து தெருவுக்கு செல்வதற்கு கூட பல மணி நேரம் கழித்துதான் செல்ல வேண்டியிருந்தது. அதோடு முக்கிய சாலைகளில் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள், பஸ்கள் தண்ணீரை கிழித்துக் கொண்டு செல்லும்போது கார்கள் அடித்துச் செல்லப்பட்டு பல அடி தூரம் போய் நின்றன. அண்ணாசாலை மற்றும் காமராஜர் சாலை மட்டும் அவசர போக்குவரத்துக்காக போலீசார் தயார் நிலையில் வைத்திருந்தனர். இதனால் அந்த சாலைகளில் மட்டும் வாகனங்கள் சென்றன. ஆனால் முக்கிய சாலைகளில் இருந்து அருகில் உள்ள சாலைகளுக்கு செல்ல முடியவில்லை.

குறைந்த அளவே வாகனங்கள் இயங்கினாலும், அந்த வாகனங்கள் மிதந்த படியே சென்றன. பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி நின்றன.

The post அண்ணா, ஈவெரா, காமராஜர் சென்னையின் இதயமான சாலைகளிலும் வெள்ளம் appeared first on Dinakaran.

Tags : Anna ,Eevera ,Kamaraj ,Chennai ,Annasalai ,Evera Highway ,Kamaraj Road ,Evera ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட...