×

அசுர வேகத்தில் அழிந்து போகும் நுண்ணுயிரிகள் 2050ம் ஆண்டிற்குள் உலகளவில் 90 சதவீதம் மண்வளம் குறையும்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபாய எச்சரிக்கை

சிறப்பு செய்தி

‘‘மண்வளம் காப்போம், மழைவளம் பெருக்குவோம்’ என்பது இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்பினரும் தாரக மந்திரமாக வைத்திருக்கும் ஒரு சொல். இந்த பூமியில் மட்டுமல்ல, எந்த கிரகத்தில் வேண்டுமானாலும் மனிதர்களும், உயிரினங்களும் வாழ முடியும். அதற்கு அங்கு இருக்க வேண்டிய அத்தியாவசியமானது இரண்டு. ஒன்று உணவு, மற்றொன்று நீர். இதில் உணவை நமக்கு கொடுப்பதற்கு அடித்தளமாக இருப்பது நிலம் என்னும் மண். நீரை நமக்கு தரும் ஆதாரமாக இருப்பது மழை. இதை உணர்ந்து ‘மண்வளம் காப்போம், மழைவளம் பெருக்குவோம்’ என்ற சொல்லை செயலாக்கம் செய்வதில் மனிதகுலம் முனைப்பு காட்ட வேண்டியது மிகவும் அவசியம். இதில் மண்ணின் வளத்தை காப்பது என்பது, உலகளவில் தற்ேபாதுள்ள தலையாய கடமைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஆண்டு தோறும் டிசம்பர் 5ம்தேதி (இன்று) உலக மண்தினம் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு இதற்கான இலக்கு என்பது ‘மண் மற்றும் நீர் வாழ்வின் ஆதாரம்’ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி உலகளாவிய மண்வளம் குறித்து பல்வேறு தகவல்களை, சுற்றுச்சூழல் அமைப்புகள் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

மிக முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதல் தடுப்பு அமைப்பு, ‘உலகளவில் மண்வளத்தை பேணிக்காப்பது அனைவருக்குமான முழுமுதற் கடமை. இதில் நாம் அலட்சியமாக இருந்தால், 2050ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள 90 சதவீத மண்பரப்பு, அதன் வளத்தை இழந்து விடும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இதன்மூலம் உலகளவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அது பட்டினிச்சாவுகள் அதிகளவில் அரங்கேற வழிவகுத்து விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து இயற்கை மேம்பாடு சார்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:

மண்ணின் வளம் மக்களின் வளம். மண்ணின் நலம் மக்களின் நலம். மண்ணின் தன்மை அறியாமல் விவசாயம் செய்வது, புண்ணின் தன்மை அறியாமல் செய்த சிகிச்சைக்கு சமமானது. இந்த அடிப்படையில் மண்ணை பாதுகாப்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும் உணரவேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தால், குறுகிய நிலத்தில் கூட அதிகளவில் சாகுபடி என்பது கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்காக நாம் நவீன யுத்திகள் அனைத்தையும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக வேதியியல் உரங்களை அதிகளவில் பயன்படுத்துகிறோம். இதனால் மண்ணின் வளம் குன்றி அது மலடாகிறது. மண்ணின் வளத்திற்கு முக்கிய காரணியாக இருப்பது நுண்ணுயிரிகள். ஒரு சதுரடி மண்ணில், அதன் வளத்திற்கு நன்மை செய்யும் 5 லட்சம் கோடி நுண்ணயிரிகள் உள்ளது. வேதியியல் உரங்களை கொட்டுவதால் நுண்ணுயிரிகளின் வாழ்வாதாரம் பறி போகிறது. மண்ணின் ஸ்திரத்தன்மை இழக்கிறது. நுண்ணுயிரிகள் மறைவதால் பயிருக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. மண்ணில் அங்ககசத்து என்பது மிக அதிகளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அறிவியல் ரீதியாக சொல்லப்போனால் கரிமச்சத்து மற்றும் தழைச்சத்து ஆகியவை 24க்கு 1என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மண்ணில் இந்த விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து மண்வளம் பாழ்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மேகாலயா, மிஜோரம், மணிப்பூர், அருணாசல பிரதேசம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மண்வளத்தோடு வனவளமும் வேகமாக குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்து வருகிறது. பல மாநிலங்களில், விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருகிறது. அசுர வேகத்தில் நடக்கும் இதுபோன்ற பல்ேவறு அபத்தங்களால், 2050ம் ஆண்டுக்குள் மண்வளம் 90 சதவீதம் சரிந்து விடும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, இந்த அறைகூவலை நாம் எளிதாக கடந்து போகாமல், மண்வளம் பாதுகாப்பதற்கு முன்வரவேண்டும். இந்த முன்னெடுப்பு மட்டுமே, அடுத்தடுத்த நமது தலைமுறைகளை ஆரோக்கியத்துடன் வாழவைக்கும். இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினர்.

* இந்த மூன்றும் முக்கியம்

‘‘தாதுக்கள், காற்று, தண்ணீர், கரிமப்பொருட்கள் என்ற நான்கும் சேர்ந்தது தான் மண். மண்ணில் தாதுப்பொருட்கள் 45 சதவீதமும், நீரும், காற்றும் தலா 25 சதவீதமும் உள்ளது. கரிமப்பொருட்கள் 2-5சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதில் மணல், வண்டல் மண், களிமண் போன்றவை தாதுப்பொருட்களின் தாக்கம் அதிகம் கொண்டது. இதில் மணலில் சத்துக்களும் நீரும் தங்காது. பயிர்களுக்கான சத்துக்கள் களிமண்ணில் அதிகளவில் இருக்கும். பெரும்பாலான இடங்களில், இந்த மூன்றும் வெவ்வேறு அளவுகளில் மண்ணில் கலந்திருக்கும். மணல், வண்டல்மண், களிமண் போன்றவை எந்த அளவில் கலந்துள்ளது என்பதை பொறுத்தே அந்த மண்ணின் வளம் கணக்கிடப்படுகிறது. போதிய அளவில் இந்த மூன்றும் கலந்துள்ள மண்ணில் நீர்பிடிப்பு திறன், நீரும் காற்றும் தாங்கும் கொள்ளளவு, சுழற்சி செய்யப்படுவதற்கான வாய்ப்பு, மண்அரிப்பை தடுக்கும் திறன், வேர்கள் இறங்கும் ஆழம் போன்றவை அதிகளவில் இருக்கும்,’’ என்கின்றனர் மண்வள மேம்பாட்டு வல்லுநர்கள்.

* தீயில் கொளுத்தினால் பெரும் அபத்தமாகும்

ஒரு சிலர் பருத்தி, கம்பு, மக்காச்ேசாளம் போன்றவற்றை அறுவடை செய்த பிறகு, சிலர் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இது மிகவும் அபத்தமானது. அரை அடி மண் உருவாக ஆயிரம் ஆண்டுகளாகிறது. அதுவும் உயிர்சத்துள்ள மண் என்பது நமக்கு காலத்தால் அழியாத பொக்கிஷம் போன்றது. அந்த மண்ணில் தீயிட்டு கொளுத்துவதால் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் அழிந்து போகும். இதனால் மண் முற்றிலும் மலடாகிறது. உரத்தை கிரகிக்கும் சக்தியை இழந்து விடுகிறது. இதனால் நாம் அடுத்தடுத்து பயிரிடும் போது போடும் உரமானது, பயிருக்கு கிட்டாத சூழலும் உருவாகிறது. இப்படி பாதிப்பு நேர்ந்தால் அடுத்த பயிர் சரியாக வளராது. இப்படி சத்து குறைந்து விட்ட மண்ணுக்கு, மீண்டும் வளம் ேசர்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, பயிர்கழிவுகளை தீவைத்து எரிக்காமல், நீண்டநாட்களுக்கு அங்கேயே விட்டு, பயிர்க்கழிவு மேலாண்மையை கடைபிடித்து அகற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் வேளாண் வல்லுநர்கள்.

The post அசுர வேகத்தில் அழிந்து போகும் நுண்ணுயிரிகள் 2050ம் ஆண்டிற்குள் உலகளவில் 90 சதவீதம் மண்வளம் குறையும்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!