×

47,238 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

நாமக்கல், டிச.4: மாவட்டத்தில், 47,238 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல்லில் சர்வதேச நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து பேசினார். எம்எல்ஏ ராமலிங்கம், நகர்மன்ற தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த, அனைத்து சிறப்பு பள்ளி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகள், 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹20.24 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கமும் சேவை வழங்கும் தொண்டு நிறுவனங்களும், பெற்றோரும் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும், சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவைமையம் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒன்றியங்களில் கலை நிகழ்வுகள் மற்றும் தெரு முனை நாடக நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்ற துணை தலைவர் பூபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், சட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நக்கீரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், மாவட்ட கலெக்டர் உமா பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 47,238 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 38 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப்பம் பெறப்பட்டு, அதில் 19,620 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டமான நலவாரியம் 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 31,855 பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள கூடுதலாக மாதம் ₹1000 வழங்கும் திட்டத்தில் 223 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில், 415 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கலந்துக்கொள்ளும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, தகவல் பரிமாற்றம் செய்ய சைகை மொழிபெயர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

The post 47,238 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Dinakaran ,
× RELATED இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு