×

மிக்ஜம் புயல் எதிரொலியாக மாமல்லபுரத்தில் 5 அடி உயரத்துக்கு கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மாமல்லபுரம்: மிக்ஜம் புயல் எதிரொலி காரணமாக, மாமல்லபுரம் கடற்கரையில் இன்று அதிகாலை முதல் சுமார் 5 அடி உயரத்துக்கு கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடலுக்கு செல்ல மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் வங்காள விரிகுடா கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் மிக்ஜம் புயலாக மாறியுள்ளது. இப்புயல் நாளை மறுநாள் (5ம் தேதி) வடமேற்கு தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக்ஜம் புயல் எதிரொலியாக இன்று அதிகாலை முதல் மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவனேரி, புதிய எடையூர் குப்பம், சலவான்குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு, பேரூர், நெம்மேலி, புதிய கல்பாக்கம் உள்பட பல்வேறு கடற்கரை பகுதிகளில் சுமார் 5 அடி உயரத்துக்கு கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அதேபோல், புயல் நேரத்தில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மிக்ஜம் புயல் குறித்து தவறான தகவல்களை நம்பவேண்டாம். புயல் கரையை கடந்தது என அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் ராகுல்நாத் அறிவுறுத்தியுள்ளார். தற்போது மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருவதால், அப்பகுதி மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

The post மிக்ஜம் புயல் எதிரொலியாக மாமல்லபுரத்தில் 5 அடி உயரத்துக்கு கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Mikjam ,Mijam ,Mamallapuram beach ,Mijam storm ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத...