×

சென்னை விமானநிலையத்தில் 9 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதம்: 3 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் மிக்ஜம் புயல் மிரட்டல் காரணமாக, இன்று சென்னை விமான நிலையத்தில் 9 விமானங்களின் வருகை, புறப்பாட்டில் சுமார் ஒரு மணி முதல் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மேலும், 3 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் விமானங்களின் வருகை, புறப்பாடு, ரத்து குறித்து சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவனங்களிடம் பயணிகள் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாக்கக்கூடிய மிக்ஜம் புயல் மிரட்டல் காரணமாக, சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 9.40 மணியளவில் மும்பைக்கு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று மாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து ஐதராபாத் செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 2 விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இன்று காலை 8.55 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என மொத்தம் 3 விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் சிங்கப்பூர், துபாய், சார்ஜா, அந்தமான், மும்பை, ஜோத்பூர், ஹைதராபாத் ஆகிய 7 விமானங்களின் புறப்பாடு மற்றும் துபாய், மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 2 விமானங்களின் வருகை என மொத்தம் 9 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 5 மணி நேரம்வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு விமானங்களின் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து விமான பயணிகளும் முன்னதாகவே தாங்கள் பயணிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தாங்கள் செல்லவேண்டிய ஊர்களின் விமான புறப்பாடு, வருகை பற்றி விவரங்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்றார்போல் தங்களின் பயணங்களை அமைத்து கொள்ள வேண்டும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

The post சென்னை விமானநிலையத்தில் 9 விமானங்களின் வருகை, புறப்பாடு தாமதம்: 3 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Meenambakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் துபாய் செல்ல...