×

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை புறக்கணித்ததால் காங்கிரஸ் படுதோல்வி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் பரபரப்பு தகவல்

டெல்லி: சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் புறக்கணித்ததால், மேற்கண்ட மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்கண்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டங்கள் நடத்தப்பட்டது. பாஜகவுக்கு பல வியூகங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் தெலங்கானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், ‘இந்தியா’ கூட்டணியின் செயல்பாடுகள் முடங்கியது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று விரும்பியது.

அப்போது தான், வரும் லோக்சபா தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை தனது கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று நம்பியது. இந்த கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் ‘இந்தியா’ கூட்டணியில் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் அளித்த பேட்டியில், ‘ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது’ என்றார். ஏற்கெனவே, ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தது.

இதற்கு காரணம், மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசச் சென்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர்கள் கமல்நாத்தும், திக்விஜய் சிங்கும் அவமதித்துவிட்டதாக உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி தெரிவித்தார். இவ்வாறாக நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், இ.கம்யூ கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி உள்ளிட்ட தலைவர்கள் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தும், காங்கிரசின் செயல்பாட்டால் கடும் அதிருப்தியில் இருந்தனர். மேலும் மேற்குவங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களும் காங்கிரஸ் மீது கோபத்தில் இருந்தனர்.

காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்குவதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்க முடியும் என்று நிதிஷ் குமார் யோசித்து வருவதாகவும், கேரளாவில் காங்கிரஸ் இடதுசாரிகள், பஞ்சாப்பில் காங்கிரஸ் – ஆம்ஆத்மி இடையே பிரச்னைகள் இருப்பதால் மூன்றாவது அணிக்கான சாத்திய கூறுகள் குறித்து மற்ற எதிர்கட்சிகளும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் வெளியானது. இவற்றில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தலில் போட்டியிட்டிருந்தன.

அந்த கட்சிகளுடன் காங்கிரஸ் ஒன்றிணைந்து போகாததால், மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றிப் பெற்றுள்ளது என்பது தற்போதைய தேர்தல் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, தெலங்கானாவில் பாஜக 13.77%, மற்ற எதிர்கட்சிகளான காங்கிரஸ் 40.02%, பிஆர்எஸ் 38.11%, ஏஐஎம்ஐஎம் 1.07%, பிஎஸ்பி 1.18%, இடதுசாரிகள் 0.65% வாக்குகள் பெற்றுள்ளன. அதேநேரம் ராஜஸ்தானில் பாஜக 41.92%, மற்ற எதிர்கட்சிகளான காங்கிரஸ் 39.06%, ஆம்ஆத்மி 0.34%, ஏஐஎம்ஐஎம் 0.01%, பிஎஸ்பி 2.11%, இடதுசாரிகள் 1.05%, ஆர்எல்டிபி 2.2% வாக்குகள் பெற்றுள்ளன. எதிர்கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 43 சதவீதத்தை தாண்டியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக 48.67%, மற்ற எதிர்கட்சிகளான காங்கிரஸ் 40.29%, ஆம்ஆத்மி 0.40%, ஏஐஎம்ஐஎம் 0.22%, பிஎஸ்பி 3.15%, இடதுசாரிகள் 0.4%, ஐக்கிய ஜனதா தளம் 0.02%, சமாஜ்வாதி 0.4% வாக்குகள் பெற்றுள்ளன.

எதிர்கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 44 சதவீதத்தை தாண்டியுள்ளது. சட்டீஸ்கரில் பாஜக 45.80%, மற்ற எதிர்கட்சிகளான காங்கிரஸ் 41.89%, ஆம்ஆத்மி 1.00%, பிஎஸ்பி 2.52%, இடதுசாரிகள் 0.47%, சமாஜ்வாதி 0.04% வாக்குகள் பெற்றுள்ளன. எதிர்கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 45 சதவீதத்தை தாண்டியுள்ளது. மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி பார்த்தால், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தலில் போட்டியிட்டிருந்தால், பாஜகவின் வாக்கு சதவீதத்தை குறைத்திருக்க முடியும். மேலும் பாஜக மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகளும் குறைந்திருக்கும். காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லாததால் மூன்று மாநிலங்களிலும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

அதுமட்டுமின்றி 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் கட்சியானது ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை கண்டு கொள்ளாதது பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதே நிலை லோக்சபா தேர்தலில் நீடித்தால் பாஜகவை தோற்கடிக்க முடியாத நிலையே ஏற்படும் என்கின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டே, வாக்கு எண்ணிக்கை ஒருபக்கம் நடைபெற்று வரும் அதே நேரம், காங்கிரஸ் தலைவர் கார்கே ‘வரும் 6ம் தேதி டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும்’ என்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கும், எந்தெந்த கட்சிகள் புறக்கணிக்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

The post சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளை புறக்கணித்ததால் காங்கிரஸ் படுதோல்வி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Rajasthan ,Madhya Pradesh ,Congress ,India ,Election Commission ,Delhi ,Dinakaran ,
× RELATED மராட்டிய மாநிலம் புனே நகரில் பெய்து வரும் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு