×

தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது மிக்ஜாம்; சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பாலச்சந்திரன் பேட்டி

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (02-12-2023) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னைக்கு 290 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து 4-ம் தேதி வடதமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும். டிச.5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தமிழ்நாட்டில் அநேக இடங்களில் 2 நாட்கள் மிதமான மழை பெய்யும். மிக்ஜாம் புயல் நகரும் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும்.

தீவிர புயலாக கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் சில நேரங்களில் 110 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும். சென்னையில் இன்றும் நாளையும் ஆங்காங்கே அதி கனமழை பெய்யும். மிக மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் 32 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு உள்ளிட்ட 2 இடங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. மீனவர்கள் 5-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது மிக்ஜாம்; சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : MIKJAM ,CHENNAI ,BALACHANDRAN ,Thiruvallur ,Chengalpattu ,Southwest ,
× RELATED மிக்ஜாம் புயல், தென் மாவட்ட வெள்ள...