நெல்லை, டிச. 3: நெல்லை அருகே வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.11.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர். இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவரது டெலிகிராம் எண்ணிற்கு கடந்த மாதம் ஒரு லிங்க் வந்துள்ளது. அதனை தொடர்பு கொண்டபோது ஒரு இணையதளத்திற்கு அது சென்றுள்ளது. அவர் அதனை தொடர்பு கொண்டு கேட்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கிருந்து பேசிய நபர்கள், அந்த இணையத்தளத்தில் கொடுக்கப்படும் பயிற்சிகளை நிறைவு செய்தால் உங்களது அக்கவுண்டில் பணம் ஏறும் என்றும், அந்த இணையதள நிறுவனத்தில் குறைவாக முதலீடு செய்தால் அதிகமான லாபம் கிடக்கும். அந்த லாப பணம் நேரடியாக அவரது அக்கவுண்டில் வரவு வைக்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவர் கடந்த 28-11-2023 முதல் கடந்த 30ம்தேதி வரையில் அடுத்தடுத்து, 5 அக்கவுண்ட் எண்களுக்கு ரூ.11 லட்சத்து 88 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் உறுதியளித்ததுபோல பணம் ஏதும் அக்கவுண்டில் வரவு வைக்கப்படவில்லை. மேலும் அதன் பின்னர் அந்த வாலிபரால் அந்த நபர்களை செல்போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.11.89 லட்சம் மோசடி appeared first on Dinakaran.
