×

சட்டீஸ்கர், மபி, ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் இன்று ஓட்டு எண்ணிக்கை: பிற்பகலில் முடிவு தெரியும்

புதுடெல்லி: சட்டீஸ்கர், மபி, ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகல் அங்கு யார் ஆட்சி அமைகிறது என்பது தெரிந்துவிடும். மிசோரம் மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளன. 40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜோரம்தங்கா உள்ளார். அங்கு நவ.7ம் தேதி தேர்தல் நடந்தது.

90 தொகுதி கொண்ட சட்டீஸ்கரில் நவ.7 மற்றும் 17ம் தேதி என்று இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது முதல்வராக பூபேஷ் பகெல் உள்ளார். 230 தொகுதிகள் கொண்ட மத்தியபிரதேசத்தில் நவ.17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்து விட்டதால் 199 தொகுதிகளுக்கு நவ.25ம் தேதி தேர்தல் நடந்தது.

அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில் நவ.30ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு பிஆர்எஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் மிசோரம் மாநிலத்தில் 80.66 சதவீதமும், சட்டீஸ்கரில் 76.31 சதவீதமும், மபியில் 77.82 சதவீதமும், ராஜஸ்தானில் 75.45 சதவீதமும், தெலங்கானாவில் 71.34 சதவீத வாக்குகளும் பதிவானது.

மிசோரம் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை நாளை தள்ளிவைத்துள்ளது. மற்ற 4 மாநிலங்களில் திட்டமிட்டபடி இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இந்த 4 மாநிலங்களில் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரிந்து விடும். எந்த கட்சி ஆட்சியை அமைக்கும் என்பது பிற்பகலில் தெளிவாக தெரிந்து விடும்.

The post சட்டீஸ்கர், மபி, ராஜஸ்தான், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் இன்று ஓட்டு எண்ணிக்கை: பிற்பகலில் முடிவு தெரியும் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Mabi ,Rajasthan ,Telangana ,Assembly ,New Delhi ,Legislative Assembly ,
× RELATED போலீஸ்காரர் வெட்டி கொலை சட்டீஸ்கரில் நக்சல்கள் அராஜகம்