×

ஒவ்வொரு வட்டத்திலும் 2 கிராமங்களில் வேளாண் துறைகள் மூலம் விழிப்புணர்வு முகாம்

 

திருவள்ளூர்: வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் உத்தரவின்பேரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேளாண்மை மற்றும் அனைத்து சகோதரத் துறைகள் சார்ந்த மாபெரும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமிற்கு பொன்னேரி கோட்டம் வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) அமுதா தலைமை தாங்கினார்.

முகாமில் புழல் வட்டாரம் கன்னியம்மன் பேட்டை, சோழவரம் வட்டாரம் மல்லியங்குப்பம், கும்மிடிபூண்டி வட்டாரம் காட்டுகொல்லிமேடு, மீஞ்சூர் அனுப்பம்பட்டு கிராமங்களில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையம் அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த அனைத்து திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

இதில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்ந்த திட்டங்களான உழவர் சந்தை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மின்னணு தேசிய வேளாண் சந்தை, வேளாண் உட்கட்டமைப்பு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் முறைப்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பயிர் காப்பீடு மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுதா மற்றும் துறை அலுவலர்கள் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர். பொறியியல் துறையில் இயந்திரங்கள் வாங்க மானியங்கள் குறித்தும், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் திட்டம் குறித்தும் தெரிவித்தனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் (வேளாண் வணிகம்) ஏழுமலை, பாஸ்கர், பூபாலன், தவமணி நாச்சியார், சுஜிதாமேரி ஆகியோர் செய்திருந்தனர்.

The post ஒவ்வொரு வட்டத்திலும் 2 கிராமங்களில் வேளாண் துறைகள் மூலம் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Sales ,Department ,Dinakaran ,
× RELATED ரூ.33 கோடி மதிப்பில் வேடங்கிநல்லூரில்...