×

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்; ஆளுநர்கள் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆளுநர்கள் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டுமென அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி வரும் 22ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இதில், இந்தியில் பெயரிடப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதா உள்ளிட்ட 19 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒட்டி, அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அர்ஜூன் ராம் மேக்வால், காங்கிரஸ் எம்பிக்கள் ஜெய்ராம் ரமேஷ், பிரமோத் திவாரி, கவுரவ் கோகாய், திரிணாமுல் காங்கிரசின் டெரிக் ஓ பிரைன், சுதிப் பந்த்யோபாத்பாய், திமுக தரப்பில் பி.வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்களுக்கு ஆங்கிலப் பெயர் சூட்ட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும், மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தும் விவகாரம், பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆளுங்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருதல் போன்ற விவகாரங்கள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்தபின் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘இக்கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு முழு அளவில் தயாராக இருக்கிறது.

எனவே அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். விவாதம் நடத்த ஏற்ற சூழலை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகள், நடைமுறைகளை பின்பற்றி விவாதங்கள் நடைபெறும்’’ என்றார்.
அவையின் முதல் நாளான நாளை, கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீதான புகாரில் மக்களவை நெறிமுறைக் குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்பட உள்ளது.

இந்த விவகாரத்தில் மஹுவா மொய்த்ராவை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், அவையில் தாக்கல் செய்யும் முன்பாகவே நெறிமுறைக் குழுவின் அறிக்கை மீடியாக்களில் கசிந்தது தொடர்பாகவும் பேச வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் பிரச்னை பேச அனுமதிக்க வேண்டும்
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்பி பி.வில்சன் அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பது மக்கள் நலனுக்காக நடத்தப்படுவதாக தெரிவிக்கும் ஒன்றிய அரசு, மக்கள் பிரச்னைகள் பற்றி இரு அவைகளிலும் பேசுவதற்கும் அனுமதிக்க வேண்டும். வெறும் மசோதாக்களை நிறைவேற்றுவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்க கூடாது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் அரசியல் சாசன அமர்வுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். ஆளுநர்கள் இதுபோன்று அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வது குறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். இதைத்தவிர விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றை பற்றியும் நேரம் ஒதுக்கி விவாதிக்க வேண்டும்’’ என்றார்.

The post நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்; ஆளுநர்கள் நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Session ,New Delhi ,Parliament.… ,Dinakaran ,
× RELATED 17வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு...