×

இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியின் இடைக்கால பொது செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலா, துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்‍கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை.

அந்த கூட்டத்தில் அவர்களாகவே ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டனர். முதல்வராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது கூட எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சசிகலா தற்போது வரை அதிமுகவில் உறுப்பினராக உள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றார். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுச்செயலாளராக பொதுக்குழுவால் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுக்குழு விதிகளின் படிதான் நடைபெற்றுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழு விதிகளின்படி கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதன் அடிப்படையில் சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நாளை தீர்ப்பளிக்கவுள்ளனர்.

The post இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : High Court ,Sasikala ,Chennai ,VK Sasikala ,AIADMK ,
× RELATED நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் கேட்ட...