×

ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஈடி அதிகாரி கைது: மேலும் பலரிடம் பல கோடி பணம் பறித்தது அம்பலம், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கண்டுபிடிப்பு

* சம்மன் தயாராகிறது
* மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய, விடிய 13 மணி நேரம் சோதனை
* முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் பறிமுதல்
* அங்கித் திவாரியை காவலில் எடுக்க முடிவு

சென்னை: வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைதான நிலையில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை 7 மணி வரை விடிய, விடிய 13 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள், கணினி, லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லஞ்ச விவகாரத்தில் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பல அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. இதனால், உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றும் நவல் கிஷோர் மீனா என்ற அமலாக்கத்துறை அதிகாரி ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை மீது கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் உடைந்து சுக்குநூறானது. இந்நிலையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைதானது, அமலாக்கத்துறை ஒன்றும் நேர்மையான அமைப்பு இல்லை. எதிர்க்கட்சியினரை பழிவாங்கத்தான் ஒன்றிய பாஜ அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில்தான், அங்கிட் திவாரி வாங்கும் லஞ்சப் பணத்தில் அமலாக்கத்துறை உயரதிகாரிகளுக்கும் பங்கு போகிறது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணைக் கண்காணிப்பாளராக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலக ஆய்வாளர் அங்கிட் திவாரி (32),6 மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கதுறை விசாரணைக்கு வந்துள்ளது.

இதில் இருந்து விடுவிக்க ரூ.3 கோடி தரவேண்டும் என வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார். முதல் தவணையாக ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கும்போது அங்கிட் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திண்டுக்கல் மின்வாரிய காலனியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் டிஎஸ்பி நாகராஜன் மற்றும் போலீசார் 15 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதன்பின் திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன் ஆஜர் செய்தனர்.

இதையடுத்து அவரை வரும் 15ம் தேதி வரை வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அங்கிட் திவாரி அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சோதனையை தொடங்கினர். 13 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், வருகைப் பதிவேடுகளை கைப்பற்றினர். அங்கிச் திவாரி பலரிடம் பல கோடி ரூபாய் பணம் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவர் ஒரு உயர் அதிகாரியிடம் பேசிய பின்னர்தான் ரூ.3 கோடியில் இருந்து ரூ.51 லட்சமாக குறைத்துள்ளார்.

இதனால், அந்த அதிகாரி யார் என்றும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். மதுரை, சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதிகாரி அங்கிட் திவாரியின் லேப் டாப்பில் கிடைத்த முக்கிய ஆவணங்களின் பேரில் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. இது தவிர கைதான அதிகாரி அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாிக்க திண்டுக்கல் போலீசார் கோர்ட்டில் மனுச் செய்ய உள்ளனர். மணல் குவாரியிலும் சோதனை: அங்கிட் திவாரி சில நாட்களுக்கு முன்னர் மணல் பிரச்னையில் குவாரிகளிலும் சோதனை நடத்தியுள்ளார். இதனால் மணல் குவாரி அதிபர்களிடமும் அவர் பணம் கேட்டு மிரட்டினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

* சிஆர்பிஎப் போலீசாருக்கு தமிழக போலீஸ் எதிர்ப்பு
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது நேற்று அதிகாலை 1 மணியளவில் கோவையில் இருந்து 20க்கும் அதிகமான சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்புக்காக வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை தல்லாகுளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர், ‘ஏற்கனவே இந்தோ-திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பதால், சிஆர்பிஎப் படையினரை அனுமதிக்க முடியாது’ என எதிர்ப்பு தெரிவித்தனர். அமலாக்கத்துறை தரப்பு வக்கீல்கள் வாக்குவாதம் செய்தனர்.

இதனால், சிஆர்பிஎப் அதிகாரிகள் 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். நேற்று காலை 7 மணிக்கு சோதனை முடிந்தவுடன் 6 மணி நேரமாக காத்திருந்த சிஆர்பிஎப் போலீசார் மீண்டும் கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளும் கார்களில் புறப்பட்டு சென்றனர். இரவு முழுக்க ஆண் அதிகாரிகள் மட்டுமே அலுவலகத்தில் இருந்தனர். இவர்களுக்கு இரவு உணவு, அதிகாலையில் டீ, காபி ஆகியவற்றை அமலாக்கத்துறை ஊழியர்கள் வழங்கினர்.

* கதறி அழுத அங்கித் திவாரி
அங்கித் திவாரி நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திண்டுக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் மிகுந்த சோகத்துடன் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்கள் யாருடனும் பேசாமல் இருந்தார். நள்ளிரவில் அங்கித் திவாரி கதறி அழுததால் சிறை காவலர்கள் அவருக்கு வேறு உதவி எதுவும் வேண்டுமா? எனக் கேட்டனர். ஆனால், அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. விடிய விடிய தூங்காமல் தனது அறையிலேயே சத்தமாக கதறி அழுதபடியே இருந்தார்.

The post ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய ஈடி அதிகாரி கைது: மேலும் பலரிடம் பல கோடி பணம் பறித்தது அம்பலம், உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : ED ,Summons ,Madurai ,Dinakaran ,
× RELATED பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான...