×

அங்கித் திவாரி கைது எதிரொலி: மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு?

மதுரை: லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், சுமார் 15 மணிநேரம் நடத்திய விசாரணையின் முடிவில், திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்றிரவு அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கித் திவாரியை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வசூலித்து பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளன. தொடர்ந்து அமலாக்கத்துறையின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளரா என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதும் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கித் திவாரிக்கு தொடர்புடைய இதர இடங்களிலும் சோதனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post அங்கித் திவாரி கைது எதிரொலி: மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு? appeared first on Dinakaran.

Tags : Ankit ,Tamil Nadu Anti-Bribery Department ,Madurai ,Ankit Tiwari ,Tamil Nadu ,
× RELATED ED அதிகாரி அங்கித் திவாரியின் காவல் நீட்டிப்பு..!!