×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா: விதவிதமான உணவுகளை சுவைத்த பொதுமக்கள்

திருவள்ளூர், டிச. 2: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பாக சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) சண்முகம் அனைவரையும் வரவேற்றார். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வேதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் தலைமை தாங்கி சிறுதானிய உணவுகளுடன் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை திறந்து வைத்தும் அவைகளை பார்வையிட்டும், சிறுதானிய உணவு வகைகள் குறித்து கேட்டறிந்து பாராட்டினார்.

இதில் அனைத்து துறை சார்பாக சிறுதானிய உணவுகளுடன் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளில் நுகர்வோர் நலன் தொடர்புடைய அரசு துறைகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மருத்துவ ஊட்டசத்து பயிலும் கல்லூரி மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்துக் கொண்டு வந்த சிறுதானிய உணவு வகைகளை அனைவரின் பார்வைக்காக காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த சிறுதானிய உணவுத் திருவிழாவை இலவசமாக கண்டு பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததது.

இதனால் இத்திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அனைத்து அரங்குகளையும் கண்டு, சிறுதானியங்கள் பற்றி அரங்குகளை அமைத்திருந்தவர்களிடம் விளக்கங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் முத்தாய்ப்பாக வந்திருந்த அனைவருக்கும் சிறுதானிய உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அனைவரும் சிறுதானியத்தில் இத்தனை சுவையாக செய்ய முடியுமா என வியந்தபடி உண்டு சுவைத்தனர். இதனைத் தொடர்ந்து சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற அமைப்புகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் பரிசும், சான்றிதழ்களும், மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். முடிவில் மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் அம்பிகா நன்றி கூறினார்.

தயாரிப்பது எப்படி?
30க்கும் ேமற்பட்ட அரங்குகளில் கேழ்வரகு கூழ், கம்பங் கூழ், கேழ்வரகு களி, கம்பங் களி, கம்பு அடை, கம்பு கொழுக்கட்டை, கம்பு பணியாரம், கம்பு பாலக் ரொட்டி, திணை மாவு உருண்டை, மூக்கடலை சுண்டல், குதிரைவாலியில் இட்லி, தோசை, பிரியாணி, கேழ்வரகுவில் அடை, உப்புமா, கைக்குத்தல் அரிசி வடை, சாமை புளி பொங்கல், சிறு தானிய புட்டு மிக்ஸ், சோள பணியாரம், சோளமாவு ரொட்டி, தினை கொழுக்கட்டை, தினை வெஜ் பிரியாணி, மக்காச்சோளம், காய்கறி உப்புமா, முளைக்கம்பு, வரகு, பச்சைபயிறு, வெண்பொங்கல், பழைய சாதம், மோர் சாதம், தயிர் சாதம், வரகு கார ஆப்பம், வரகு தக்காளி சாதம், கம்பு ஐஸ்கிரீம், நெருப்பில் சுட்ட வேர்க்கடலை பல்வேறு வகையான சிறு தானிய உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது சிறு தானிய உணவு வகைகள் தயாரிப்பது எப்படி என்பது குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா: விதவிதமான உணவுகளை சுவைத்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : International Small Grains Food Festival ,Tiruvallur ,Tiruvallur District ,Collector ,T. Prabhu Shankar ,District Supply and Consumer Protection Department ,International Small Grain Food Festival ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...