×

நெருப்பினால் தண்டிக்காதீர்கள்!

இஸ்லாமிய வாழ்வியல்

சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை எப்படி யாருக்கும் இல்லையோ அப்படியே நெருப்பைக் கையில் எடுக்கும் உரிமையும் யாருக்கும் இல்லை. கலவரங்களின்போது மட்டுமல்ல, குடும்பச் சண்டை, சொத்துத் தகராறு, வரதட்சணைப் பிரச்னை போன்ற தனிப்பட்ட நிகழ்வுகளின் போதுகூட தீயினால் கொளுத்தும் கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நெருப்பைக் கொண்டு தண்டிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது?

மனித உயிர்களை மட்டுமல்ல, இதர எளிய உயிர் இனங்களைக்கூட நெருப்பினால் தண்டிக்கக் கூடாது என்பது இஸ்லாமியச் சட்டம். நபிகள் நாயகம் (ஸல்) தம் தோழர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தார். வழியில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது, அண்ணலார் தமது தேவைகளை நிறைவேற்றச் சென்றுவிட்டார். நபித்தோழர்கள் அமர்ந்திருந்த இடத்தில் எறும்புப் புற்றுகள் நிறைய இருந்தன. ஏராளமான எறும்புகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.

என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, நபித்தோழர்களில் சிலர் அந்த எறும்புப் புற்றுகளை எரித்துவிட்டார்கள். சின்னஞ்சிறு உயிர்கள் கருகி மடிந்தன. திரும்பி வந்த நபிகள் நாயகம் அவர்கள், எரிக்கப்பட்டிருந்த எறும்புப் புற்றுகளைப் பார்த்து வேதனையும் கவலையும் அடைந்தவராய், “இந்த எறும்புப் புற்றுகளை எரித்தவர்கள் யார்?” என்று கேட்டார்.

“நாங்கள்தான் எரித்தோம்” என்று நபித்தோழர்கள் கூறினார்கள். உடனே நபிகளார் கூறினார்;

“நெருப்பினால் யாரையும், எந்த உயிரையும் தண்டிக்காதீர்கள். நெருப்பினால் வேதனை அளிக்கும் தண்டனையைத் தருவது அதிபதியான இறைவனின் உரிமையாகும். (மனிதர்களுக்கு அந்த உரிமை இல்லை) (ஆதார நூல் – அபூதாவூத்)

“நெருப்பினால் கொலை செய்யாதீர்கள். நெருப்பால் தண்டிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியதாகும்.” (ஆதார நூல் – புகாரி) நெருப்பின் மூலம் எறும்புகளைக்கூட தண்டிக்கக் கூடாது எனும்போது, படைப் புகளிலேயே மிகச் சிறந்த – உயர்ந்த படைப்பான மனித உயிர்களைத் தீயால் எரிப்பது என்ன நியாயம்? இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பு உண்மையானால், பிறர்க்குத் தீங்கு இழைக்கும் நோக்கத்துடன் தீக்குச்சியைத் தீண்டுவதற்குக்கூட நமக்கு உரிமை இல்லை. வெறுப்பும் வேண்டாம்; நெருப்பும் வேண்டாம்.

இப்போது நமக்குத் தேவை அன்பு. மதமாச்சரியங்களைக் கடந்து நம் உள்ளங்களில் ஆன்மிக அன்பு வெள்ளம் பெருகட்டும். வெறுப்பு எனும் நெருப்பை அந்த அன்பு வெள்ளம் அடித்துச் செல்லட்டும்.

– சிராஜுல்ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அநீதி இழைப்போரை இறைவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.” (குர்ஆன் 3:57)

The post நெருப்பினால் தண்டிக்காதீர்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED அஷ்டகொடி