![]()
சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீசப்பட்ட வழக்கின் ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கும் பணியில் கிண்டி காவல்துறையினர் மும்மரம் அடைந்துள்ளனர். ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி கருக்கா வினோத் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வடமாநிலம் சென்றுள்ள கிண்டி ஆய்வாளர் சென்னை வந்ததும் ஆவணங்களை வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே, கடந்த 24ம் தேதி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த 14 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் (42), நீட் விலக்கு மசோதா மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாததை கண்டித்து 2 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசினார். அவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து கருக்கா வினோத்தால் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கும், சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்களில் ரவுடி கருக்கா வினோத் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருவதாகவும், பதற்றமான சூழ்நிலை உருவாகுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
The post ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டுவீசப்பட்ட வழக்கின் ஆவணங்களை என்ஐஏவிடம் ஒப்படைக்க காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.
