×

கோவை ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் கொள்ளையடித்தவர் வீட்டின் ஓட்டை பிரித்து கணவனை தப்ப வைத்த மனைவி அதிரடி கைது: 3.2 கிலோ தங்க நகை பறிமுதல்

கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் பிடிக்க சென்றபோது வீட்டின் ஓட்டை பிரித்து தப்ப வைத்த மனைவி கைது செய்யப்பட்டார். வீட்டில் இருந்த 3.2 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை 100 அடி ரோடு பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பக்கவாட்டு சுவரில் இருந்த ஓட்டை வழியாக கடந்த 27ம் தேதி நள்ளிரவு புகுந்த வாலிபர் ஒருவர், முதல் மற்றும் 2ம் தளத்தில் இருந்த 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தேவரெட்டியூர் பகுதியை சேர்ந்த விஜய் (எ) விஜயகுமார் (24) என்பது தெரியவந்தது. கடைக்கு வெளியே மற்றும் சாலைகளில் இருந்த கேமராக்களை ஆய்வு செய்ததில், அவர் ஆட்டோவிலும், நடந்தும் சென்று பஸ் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொள்ளாச்சி, கேரளா, சேலம், பெங்களூர் உள்ளிட்ட பகுதியில் தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் விஜய் பொள்ளாச்சி வழியாக ஆனைமலை சென்றிருப்பதும், அங்கு அவர் வசித்த வீட்டில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கே சென்று வீட்டின் கதவை தட்டினர். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி நர்மதா (22) கதவை லேசாக திறந்தார். தனது 3 மாத ஆண் குழந்தைக்கு பால் கொடுப்பதாகவும், சில நிமிடத்தில் வந்து கதவை திறப்பதாகவும் கூறிவிட்டு கதவை மூடிவிட்டார்.

போலீசார் 5 நிமிட நேரம் காத்திருந்தனர். பின்னர் நர்மதா கதவை திறந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை ஓடு திறந்து கிடந்தது. அதன் வழியாக விஜயை நர்மதா தப்பிக்க வைத்தது தெரிந்தது. இதையடுத்து பின்னர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது 3.2 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் மற்றும் 4 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த நகைகள் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடியவை என நர்மதா தெரிவித்தார். இதையடுத்து நர்மதாவை போலீசார் கைது செய்தனர்.

மொத்தம் 4.6 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள 1.4 கிலோ தங்கத்தை விஜய் தப்பி செல்லும்போது எடுத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. விஜய் மீது தர்மபுரி மாவட்டத்தில் வாகன திருட்டு, வீடு புகுந்து பணம் திருடியது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. விஜய்க்கு கோவை சிறையில் இருந்தபோது போக்சோ வழக்கில் கைதான சுரேஷ் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. அவர் உதவியால்தான் ஆனைமலைக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். சுரேசிற்கு இந்த கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கோவை ஜோஸ் ஆலுக்காசில் 200 சவரன் கொள்ளையடித்தவர் வீட்டின் ஓட்டை பிரித்து கணவனை தப்ப வைத்த மனைவி அதிரடி கைது: 3.2 கிலோ தங்க நகை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,200 ,Sawaran ,Jose Alukas ,
× RELATED கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைவி3...