×

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கவர்னர் – எம்எல்ஏ மோதல்: முதல்வர் ரங்கசாமிக்கே முக்கியத்துவத்தால் தமிழிசை ‘அப்செட்’ விழாவை பாதியில் நிறுத்தி கலெக்டர், அதிகாரிகளுக்கு ‘டோஸ்’

பாகூர்: புதுச்சேரியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்ற நிகழ்ச்சியில் கவர்னர் – எம்எல்ஏ நேரடியாக மோதி கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமிக்கே அனைவரும் முக்கியத்துவம் கொடுத்ததால் அப்செட்டான ஆளுநர் தமிழசை கலெக்டர், அதிகாரிகளுக்கு டோஸ் விட்டு விழாவை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டு சென்றார்.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி அரங்கனூர் சமுதாய நலக்கூடத்தில் ‘நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்’ எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகள் உடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினர். இதில், கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், அந்த தொகுதியை சேர்ந்த ஆளும் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முறையாக அழைப்பு விடுக்காவிட்டாலும், தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் லட்சுமிகாந்தன் பங்கேற்றார்.

அப்போது விழா மேடையில் கவர்னர் தமிழிசையிடம் சென்று, ‘தன்னை ஏன் இந்த விழாவிற்கு அழைக்கவில்லை. இது மத்திய அரசு விழா என்றாலும் எங்களுடைய கட்சி தலைவர் பங்கேற்றதால் இதில் கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கடும் கோபமடைந்த தமிழிசை, கலெக்டர் வல்லவனை அழைத்து நிகழ்ச்சியை சரியாக ஏற்பாடு செய்ய தெரியாதா? எனக்கூறி அவர் கடிந்து கொண்டார். அப்போது அருகில் அமர்ந்திருந்த சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தமிழிசையை சமரசப்படுத்தினர்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பயனாளிகள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். அப்போது முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணன்குமார், லட்சுமிகாந்தன் எம்எல்ஏ ஆகியோர் மேடைக்கு முன்புறமாக வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்தனர்.
விழாவுக்கு வந்தவர்கள் அனைவரும் முதல்வர் ரங்கசாமிக்கே முக்கியத்துவம் கொடுத்ததால் கோபமடைந்த தமிழிசை, மேடையில் இருந்து திடீரென ஒதுங்கி தனியாக நின்று கொண்டு அதிகாரிகளை மீண்டும் வசைபாடினார். அப்போது சபாநாயகர் நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழிசையை முன்னே வருமாறு அழைத்தார். ஆனால் தமிழிசை வர மறுத்துவிட்டார். இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்குவது பாதியிலே நிறுத்தப்பட்டு, உடனடியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதனால் விழா அரங்கில் பயங்கர சலசலப்பு ஏற்பட்டது.

ஊழலை கண்டு கொள்ளவில்லையா?.. தமிழிசை விளக்கம்
நிகழ்ச்சிக்கு பின் தமிழிசை நிருபர்களை சந்தித்தார். அப்போது, ‘ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஊழலை கவர்னர் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் கூட்டுக்கொள்ளை’ என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘எனக்கு அதில் சம்பந்தம் இருக்கும் என்று எப்படி சொல்ல முடியும். சம்மந்தம், சம்மந்தம் இல்லாமல் எதிர்கட்சியினர் பேசிவருகிறார்கள்’ என்றார்.

The post பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கவர்னர் – எம்எல்ஏ மோதல்: முதல்வர் ரங்கசாமிக்கே முக்கியத்துவத்தால் தமிழிசை ‘அப்செட்’ விழாவை பாதியில் நிறுத்தி கலெக்டர், அதிகாரிகளுக்கு ‘டோஸ்’ appeared first on Dinakaran.

Tags : Governor ,MLA ,Chief Minister ,Rangasamy ,Tamilisai ,Puducherry ,Modi ,
× RELATED தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர்...