×

பெரியபாளையம் – சின்னம்பேடு கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்த விவசாயிகள்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் – சின்னம்பேடு ஏரி கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டது. அவற்றை விவசாயிகளே களம் இறங்கி குப்பைகளை அகற்றி சீர் செய்தனர். பெரியபாளையம் – சின்னம்பேடு கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில் ராள்ளபாடி, ஜி.ஆர்.கண்டிகை, குமரபேட்டை, பனையஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் நெல், பூ செடிகள், கரும்பு ஆகியவற்றை பயிர் செய்து வருகிறார்கள். இவர்களின் தண்ணீர் தேவைக்காக ஆரணி ஆற்றில் இருந்து பெறப்படும் நீரானது பெரியபாளையம் பாளேஸ்வரம் பகுதியில் தடுப்பணை கட்டி, அங்கு தண்ணீர் தேக்கப்பட்டு இந்த தண்ணீர் சின்னம்பேடு பெரிய ஏரிக்கு கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பயன்பெற்றனர்.

ஆனால் இந்த கால்வாய் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக புதர்கள் மண்டியும், குப்பைகள் கொட்டியும் அதன் தடமே மறைந்து விட்டது. இந்த புதர்களையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் பலமுறை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். மேலும் பொதுப்பணி துறையினருக்கும் பலமுறை கோரிக்கை வைத்தனர். யாரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆரணியாற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதால் சின்னம்பேடு ஏரிக்கு விவசாயிகளே தண்ணீர் திறந்து விட்டனர். ஆனால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல் குப்பைகள் அடைத்துக்கொண்டது. இதையறிந்த விவசாயிகள் குப்பைகளை அவர்களே அகற்றினர். பின்னர் தண்ணீர் ஏரிக்கு சென்றது. மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாதவாறு கால்வாயை பராமரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

The post பெரியபாளையம் – சின்னம்பேடு கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீர் செய்த விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Chinnampedu canal ,Uthukkottai ,Chinnampedu lake ,Chinnampedu ,Dinakaran ,
× RELATED வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: கணவன் கைது