×

கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 1.40 லட்சம் மீனவர்கள் முடக்கம்

நாகை: வங்க கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து நேற்று தெற்கு அந்தமான் பகுதிக்கு வந்தது. பின்னர் அது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி நோக்கி வருகிறது. இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், புதுவை, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது.
இதைதொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீனவர் மற்றும் மீனவர் நலத்துறை சுற்றறிக்கையை நேற்று அனுப்பியது. இதில், ‘புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் நாகை மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வழங்கக்கூடிய டோக்கனை மீன்வளத்துறை நிறுத்தி வைத்ததுடன் வயர்லெஸ் கருவி மூலம் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணில் இருந்து இன்று 2வது நாளாக 1,500 விசைப்படகுகள், 5,000 பைபர் படகுகளில் செல்லக்கூடிய 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தங்களது படகுகளை கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதேபோல் கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3வது நாளாக 90 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கொள்ளிடம், பழையாறு, சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி துறைமுகங்களில் 2,500 விசைப்படகு, 5,000 பைபர் படகு, 2,500 நாட்டு படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை நாகை, மயிலாடுதுறையை சேர்ந்த 1.40 லட்சம் மீனவர்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : FISHERIES DEPARTMENT ,MAYILADU REGION ,Nagai ,South Andaman Sea ,Bengal Sea ,Mayiladu ,Dinakaran ,
× RELATED மணமேல்குடி அருகே ஆய்வுக்கு சென்ற அதிகாரி மீது படகை மோதவிட்டு தாக்குதல்