×

சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தனியார் மூலம் வழங்க ஏற்பாடு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனியார் மூலம் வழங்க ஏற்பாடு செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று காலை ரிப்பன் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். அதை தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக, சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்குவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் சென்னை மாநகராட்சியின் கீழ் மொத்தம் 358 பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன்படி சென்னை மாணவ, மாணவிகளுக்கு ஓராண்டுக்கு காலை உணவு வழங்குவதற்கு ரூ.19 கோடி செலவாகிறது. இதன் மூலம் 6530 மாணவர்கள் பயன்பொறுவார்கள்.

இப்பணியை தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்ய துணை ஆணையர் சரண்யா அரி (கல்வி) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒப்பந்ததாரர்கள் பணியை மேற்கொள்ள சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில், காலை உணவு வழங்கப்பட வேண்டும்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான காலை உணவு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து ஒரு மாதத்திற்கான உணவு வகை பட்டியல் கல்வி துறையின் மூலம் வழங்கப்படும்.

இதனை எந்த காரணம் கொண்டும் சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியின்றி மாற்றக்கூடாது. தினந்தோறும் சமைக்க வேண்டிய உணவின் எண்ணிக்கையை உணவு சமைப்பதற்கு முதல் நாள் சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலர் அவர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். காலை 8 மணிக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட வேண்டும். கால தாமதம் ஏற்படக்கூடாது. காலை 8 மணிக்கு மேல் வழங்கப்படும் உணவிற்கு தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், குழுவால் நிர்ணயிக்கப்படும் அபராதத்தொகையும் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சியால் சமையற்கூடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றிற்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப்பொருள்களின் அளவு 50 கிராம் அரிசி, ரவை, கோதுமை, சேமியா வழங்கப்பட வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்பட வேண்டும். இஸ்லாமிய பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவதாலும், சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருப்பதாலும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட வேண்டிய உணவினை சனிக்கிழமை அன்று அந்த பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.

சனிக்கிழமை விடுமுறை நாளில் பள்ளி வேலை நாளாக அரசு அறிவிக்கும் பட்சத்தில் புதன்கிழமை வழங்க வேண்டிய காய்கறி சாம்பருடன் கூடிய பொங்கல் வழங்கப்பட வேண்டும். இது குறித்து கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்படும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருள்கள் கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொண்டு சமைக்கக்கூடாது என 41 கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்களான தற்காலி ஊழியர்கள் 1778 பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை ஏற்படுத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்லபடுவார்கள். சென்னை மாநகராட்சியில் உள்ள கிறிஸ்துவர்களுக்கான இடுக்காட்டு தளங்களில் பின்பற்றப்படும் நிபந்தனைகளை தளர்வு செய்யப்பட உள்ளது என்பது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

* ஒப்பந்ததாரருக்கு அபராதம்

கால தாமதமாக உணவு வழங்கப்படும் போது, தரம் குறைவு, அளவு குறைவு, தரம் குறைந்த மூலப்பொருட்கள், காய்கறிகள், பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் போது மூடப்படாத வாகனம், சமையல் கூடம் சுத்தம் இல்லாமல் இருத்தல் போன்றவற்றுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மூன்று முறைக்கு மேல் சென்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

The post சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தனியார் மூலம் வழங்க ஏற்பாடு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...