×

சுடுகாட்டு கூரை முறைகேடு தொடர்பான வழக்கு முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: கடந்த 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சியில் 1995 மற்றும் 1996ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி பதவி வகித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் அரசுக்கு ₹23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2014ல் தீர்ப்பளித்தது. அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்தது.

இதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ல் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திட்ட பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின்னர் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் சிபிஐ விசாரிக்கவில்லை. உரிய ஆய்வு நடத்தாமல் இருந்துவிட்டு திடீரென சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்கியது தவறு. எனவே, இந்த தீர்ப்பை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ₹23 லட்சம் பெற்றுக்கொண்டு ₹17 லட்சம் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே தண்டனையை உறுதிசெய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் தண்டிக்க வேண்டுமென்று வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த மேல்முறையீடு வழக்குகளில் நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை. இதை சிறப்பு நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. எனவே, செல்வகணபதி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவர்களை விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்..

‘நீதி என்றும் நிலைக்கும்’
சுடுகாட்டு கூரை முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்த தீர்ப்பை கேட்டதும் செல்வகணபதி மகிழ்ச்சியடைந்தார். சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர். அவருக்கு அமைச்சர் நேரு செல்போனில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்ட அவர், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற சென்னை புறப்பட்டு சென்றார். தீர்ப்பு குறித்து செல்வகணபதி கூறுகையில், ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும். நீதி நிலைக்கும்’ என்றார்.

The post சுடுகாட்டு கூரை முறைகேடு தொடர்பான வழக்கு முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Treasurer ,ICOURT ,Chennai ,Minister of Internal Affairs ,Atymuga ,M. Selvaganapathi ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத கட்டுமானம் அகற்றும் பணி...