×

நியோமேக்ஸ் நிறுவனம் ₹5 ஆயிரம் கோடி மோசடி; பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது

மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி ₹5 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் வெளியான கவர்ச்சி அறிவிப்புகளை தொடர்ந்து, பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் ₹5 ஆயிரம் கோடி வரை நியோமேக்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதன்பேரில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான பாஜ பிரமுகர் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். வீரசக்தி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்டு, பாஜ கட்சியில் இணைந்துள்ளார். மேலும் இந்நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு, விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குற்றவாளிகளை கைது செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நியோமேக்ஸ் வழக்கில் தமிழகம் முழுவதும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் 92 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களில் ஒருவருமான சிங்காரவேலன் மற்றும் மைக்கேல் செல்வி, நடேஷ் பாபு உள்ளிட்ட இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுதவிர, நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கின் நிறுவனர்களான பாஜ பிரமுகர் வீரசக்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இவர்கள் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் திருச்சியில் வைத்து நியோமேக்ஸ் வழக்கின் தலைமை இயக்குனர்களின் ஒருவரான தலைமறைவான திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாஜ பிரமுகர் வீரசக்தி (45), மற்றும் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மகளும் இயக்குனருமான லாவண்யா ஆகிய இருவரை கைது செய்தனர். இதற்கிடையில், மதுரை கோர்ட்டில் சரணடைய சென்றபோது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மணீஷா தலைமையிலான தனிப்படை போலீசார், நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவரான பாலசுப்பிரமணியத்தையும் சுற்றி வளைத்து நேற்று கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் அடுத்தடுத்து மூவர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே கைதான கமலக்கண்ணன் உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். தங்களிடம் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என முதலீட்டாளர்கள் சிலர் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நியோமேக்ஸ் நிறுவனம் ₹5 ஆயிரம் கோடி மோசடி; பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Neomax Company ,BJP ,Madurai ,Neomax ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்ட...