×

சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கு கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது. இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், 5 மாவட்ட கலெக்டர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது. சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.

அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ. ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று வாதிட்டார். அதை தொடர்ந்து ேநற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கலெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

கைது நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று கூறி சம்மனுக்கு தடை விதிக்க ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்க துறையின் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பிய இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவைதான். குற்றம் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அமலாக்கத் துறை வாதத்தை ஏற்க முடியாது.

குற்றம் மூலம் ஈட்டப்பட்ட தொகையை கண்டறியும் முயற்சியாக அமலாக்கத் துறை, மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரமில்லை. எனவே, மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம் விசாரணை நடத்த தடையில்லை. அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆட்சேப மனுவுக்கு தமிழ்நாடு அரசு 3 வாரங்களுக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கு கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,IAS ,
× RELATED பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக...