×

அபிராமி அனுபவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உலக இலக்கியங்களிலேயே ஒரு கருத்தை, சிந்தனையை, சத்தியத்தைத் தொடர்ந்து இடைவிடாமல் வழுத்துவதற்குத் தமிழ்மொழியில் எழுந்த ஓர் இலக்கியவகை அந்தாதி என்பது. தொடர்ச்சி விட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் முதற்சொல்லாக அமைவது அந்தாதி. 96 வகையான சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகத் திகழும் இந்த அந்தாதி என்ற இலக்கிய வகைக்கான அடிப்படை சங்க இலக்கியத்தில் புறநானூற்றிலேயே காணப்படுகிறது.

“மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்”

(புறநானூறு 2.1-3)

என்ற பாடலில் அடியின் கடைசிச்சொல் அடுத்த அடியின் முதற்சொல்லாக அமைவதைப் பார்க்க முடிகிறது. இதை அந்தாதி இலக்கியத்திற்கு அடிப்படை என்று கொள்ளலாம். தமிழில் தோன்றிய முதல் அந்தாதியெனின் அது காரைக்கால் அம்மையார் பாடிய “அற்புதத் திருவந்தாதி” ஆகும். இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினோராந் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

மேலும், தமிழ்மொழியில் ‘அந்தாதி’ என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அபிராமபட்டர் அருளிய “அபிராமி அந்தாதி’’ மட்டும்தான். பல அந்தாதிகள் தமிழின்கண் தோன்றியிருப்பினும் அபிராமி அந்தாதியே பெரும்புகழுடன் திகழ்கிறது.

அம்பிகை வழிபாட்டின் பயன்கள்

வழிபாடு என்பது முதலில் பலனை எதிர்நோக்கித்தான் தொடங்குகிறது. உலகியல் வாழ்வில் மனிதனுக்குப் பற்பல தேவைகள் இருக்கின்றன. அவற்றைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அலையும் மனிதன், பக்தியையும் அதற்கு ஓர் ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொள்கிறான். பலன் கருதி பக்தி செலுத்துவது வழிபாட்டில் முதற்படிநிலை. அவ்வகையில், அம்பிகையை வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்குமென்பதை அபிராமிபட்டர் விளக்கியிருக்கிறார்.

அம்பிகையை வழிபடுவதால் பிறப்பும் இறப்பும் வராது. இதனை,
அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.

– என்று குறிப்பிடுகிறார் அபிராமிபட்டர்.

தன்னிடம் இல்லாத ஒன்றை யாருக்கும் பரிமாறமுடியாது. அம்பிகை அனைவருக்கும் பிறப்பையும் இறப்பையும் மாற்றுபவளாக இருக்கிறாள். காரணம் அவள் பிறப்பு, இறப்பு ஆகியவையில்லாத என்றுமுள பூரணப் பொருளாய்ப் பொலிகின்றாள். இப்படிப் பூரணப்பொருளாய் விளங்கும் அன்னையை வழிபடுவோர்க்கு பெரும் நிலப்பரப்பு, குதிரை, யானை முதலிய வாகன வசதிகளும் கிரீடம், பல்லக்கு போன்ற அதிகார அலங்கார அடையாளங்களும் எப்போதும் இருக்கும் வகையிலான செல்வம் மற்றும் அணிகலன்களும் கிடைக்கும் என்பதை,

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

– என்று குறிப்பிடுகிறார்.

சரி, அவ்வாறெனில் அம்பிகைமீது பக்தி சிறிதும் இல்லாத பலருக்கும் மேற்கண்ட வசதிகள் கிடைக்கின்றனவே? என்று எழும் கேள்விக்கு மூன்றாவது அடி விளக்கம் தருகிறது. அம்பிகையின் திருவடிக்கு அன்பை முற்பிறவியிலேயே செய்ததால் அவர்களுக்கு இப்பிறவியில் பலன் கிடைத்துள்ளது என்பதை ‘அன்புமுன்பு’ என்ற பதம் எடுத்துக்காட்டுகிறது.

இவ்வளவு வசதிகள் இருந்தாலும்கூட சிலருக்கு தீராத கடன் தொல்லை இருக்கும். இன்னொருவரிடம் சென்று இரந்து வாழ வேண்டியிருக்கும். இத்தன்மை அம்பிகையைச் சரணடைந்தால் மாறும். கயவர்களுடன் தொடர்பு ஏற்படாது என்பதை,

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம் பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

– என்ற பாடலில் குறிப்பிடுகிறார் அபிராமிபட்டர்.

மேலும், அம்பிகையின் அருளால் நிலம், நீர், வீடு, வாசல், தோட்டம் போன்ற சொத்துக்கள் கிடைக்கும் என்பதை 68 – ஆம் பாடலில் சொன்ன அபிராமிபட்டர் 69 – ஆம் பாடலில் செல்வம், கலம், எப்போதும் தளர்வு இல்லாத மனம், இறை வடிவம், நல்லார் சேர்க்கை, ஏன் இவ்வுலக வாழ்விற்கு எவையெல்லாம் தேவையே அத்துணையையும் அம்பாள் தருவாள் என்று சொல்லும் பட்டர், இவற்றை அம்பிகையின் கடைக்கண் பார்வையே வழங்கும் என்கிறார்.

“அபிராமி கடைக்கண்களே”

எனில் அம்பிகையின் முழுக்கண் பார்வை நமக்கு என்னென்னவெல்லாம் தரும் என்பதை யூகித்துக்கொள்ள வேண்டும். இப்படி இக சௌபாக்கியங்களைத் தரும் அன்னை பர சௌபாக்கியங்களையும் தருவாள் என்பதை,

நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும்
பொன் சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

– என்ற பாடலில் அன்னையை வழிபட்டோர் தேவமாதர்கள் ஆடும் பொன்னாலான மஞ்சத்தில் அமர்ந்து கற்பக மரங்கள் அடர்ந்த சோலையில் தங்குவர் என்று குறிப்பிடுகிறார். ஸ்ரீசக்ர வழிபாட்டில் மைய முக்கோணம் மேல்நோக்கி வைத்து வழிபட்டால், அது பர இன்பங்களையும், கீழ்நோக்கி வைத்து வழிபட்டால் இக இன்பங்களையும் அருளும். அதுபோல், அன்னை இகபர நலன்களை அருள்கிறாள்.

பக்தி என்பது பலன்களை வேண்டித் தொடங்குவதாக இருந்தாலும், அது நிறைவில் எதுவும் வேண்டாம் என்ற முதிர்ந்த நிலையை எட்ட வேண்டும். அதுதான் பழுத்த பக்தி. அத்தகு பக்தியை அபிராமிபட்டர் கூறுமிடத்து, “உண்ணாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே” – என்ற அடியில், தான் வேண்டுவது ஒன்றுமில்லை என்று குறிப்பிடுகிறார்.

67-வது பாடலில், வழிபடாமையால் வரும் துன்பம், அன்னையைப் பாடிப் பரவி அம்பிகையின் அழகை ஒரு நொடிப்போதும்கூட மனத்தில் வைத்து வழிபடாதவர்கள் உண்மை, குலம், கோத்திரம், கல்வி, நல்ல குணம் போன்றவை கிடைக்காமல் இன்னொருவரிடம் சென்று இரந்து வாழக்கூடிய நிலைமை ஏற்படும் என்கிறார் பட்டர். அன்னையே அனைத்தும் எந்தவொரு தெய்வத்தை வழிபட்டாலும், ஒரு தெய்வத்தை மட்டுமே பூரணமாக நம்பவேண்டும். மற்ற தெய்வங்களைவிட, தான் வழிபடும் தெய்வம் உயர்வு என்று பூரணமாக நம்ப வேண்டும். தன் தெய்வம்தான் பிற தெய்வங்களை இயக்குகிறது என்று மற்ற தெய்வங்களையும் மதித்தும் தன் தெய்வத்தைத் துதித்தும் ஒழுக வேண்டும்.

அவ்வகையில், புராதனமான சமயங்கள் ஆறினுக்கும் அபிராமியே தலைமை வகிக் கிறாள் என்று முழுமையாக நம்பும் பட்டர், அதை, தேறும்படி சில ஏதும் காட்டி……சமயம்.

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே

– என்ற பாடலில் குறிப்பிட்டு வேறொரு சமயத்தை நாடாதீர் என்றும், அப்படி நாடுபவரிடம் எடுத்துரைப்பது மலையை மரத்தால் செய்யப்பட்ட ஆப்பால் உடைக்க முற்படுவதுபோலாகும் என்கிறார்.

அப்படி, தன் அன்னையையே பூரணமாகப் போற்றும் பட்டர், அவளே ஒன்றாகவும் பலவாகவும் இருந்து உலகினைக் காக்கிறாள் என்பதை,
“ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள்……..”
– என்று குறிப்பிடுகிறார்.

இந்த அன்னைதான் வேதத்தின் தொடக்கம். இடை, முடிவு என முந்நிலைகளிலும்
இருக்கிறாள் என்பதை,
“அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி”
– என்று குறிப்பிடுகிறார்.

இக்கருத்தை அம்பிகையை வழிபடும் பஞ்சசதியில் காணமுடியும். அதாவது, “ஹிரீம்” என்ற பீஜம் பஞ்சசதியில் முதல், இடை, மற்றும் கடையில் பயின்று வருவதைக் காணலாம். இத்தகு வேதப்பொருளாக விளங்கும் அன்னையின் பாதங்களை வேதங்கள் இடைவிடாது ஆராதித்து ஆராதித்து அதனால் அன்னையின் சேவடி சிவந்துவிட்டதாம். இதனை,
“அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத்தான்”
– என்ற அடியில் எடுத்தியம்புகிறார்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெருந்தேவர்களால் அன்னை வழிபடப்படுகிறாள். அதாவது, பூஜிக்கப்பட வேண்டியவர்கள் அவளைப் பூஜிக்கிறார்கள். இதை லலிதா சகஸ்ர நாமமானது “மஹா பூஜ்யா” (213) என்று குறிப்பிடும். சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மூவரும் அன்னையை வழிபட்டதை,“முரணன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி”
– என்றும்

“மாலினும் தேவர் வணங்க நின்றோன்
கொன்றைவார் சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் …….”
– என்றும்

“நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி”
– என்றும் குறிப்பிடுகிறார் பட்டர்.

இதே கருத்தை சண்டிகா இருதயமானது “பிரம்ம, விஷ்ணு, சிவஸ்துதே” என்று குறிப் பிடும். மேலும், அம்பிகையின் சிம்மாசன பூஜையில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் ஆகிய மூவரும் கால்களாகவும் அதன்மீது சதாசிவன் பலகையாகவும் இருந்து, அதன்மீது அம்பிகை அமர்ந்திருப்பதை,

“பிரம்ம பாதாய நமஹ
விஷ்ணு பாதாய நமஹ
ருத்ர பாதாய நமஹ
சதாசிவ பலகாய நமஹ”
– என்ற மந்திரம் எடுத்துச் சொல்லும்.
அழகு உருவானவள் அவள்
அழகுக்கு ஒப்புமையே சொல்லமுடியாத அளவிற்குப் பேரழகியாக விளங்குபவள் அன்னை. அதை,
“அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி”

– என்று சொல்லும் அபிராமிபட்டர், தாமரை மீதும், இதயத்தாமரை மீதும் எழுந்தருளும் அன்னையின் முலைகளும் தாமரை, அவளது கண்களும் தாமரை, அவள் மலர்ந்த முகமும் தாமரை, அருளும் கரங்களும் தாமரை, நம்மைத் தாங்கும் பாதங்களும் தாமரை என்பதை வருணித்துப் பாடுகிறார் அபிராமிபட்டர்.

அழகே உருவான அன்னையைக் கண்டால், கண்கள் இன்புறுமாம். அந்த அம்பிகை கடம்ப மரக்காட்டின் நடுவே இருக்கும் அமுதக்கடலின்கண் நடுவிலுள்ள மணித்தீபத்தில் சிந்தாமணிக் கிரகத்தில் அமர்ந்திருப்பதாக சாக்த மரபு குறிப்பிடும். இத்தோற்றத்தைப் பட்டர் தியானித்துக் கண்டுகளிக்கிறார். அப்படிக் களித்த பேரானந்தத்தில் மதங்குலப் பெண்ணாகப் பிறந்து வீணைமீட்டும் சியாமளா தேவியையும் நினைவுகூர்கிறார்.

அவளது கரங்கள், ஸ்தனங்கள், பச்சைநிற அழகு போன்றவற்றை ரசித்திருக்க வேண்டும். அதுவே பேரழகு என்பதை,

கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே
பட்டரின் பணிவு

அழகே உருவான அன்னையை, அறிவே உருவான அபிராமிபட்டர் அந்தாதி, பதிகம் என்று பனுவல்களால் பாடிப்பரவியவர். குறிப்பாக, அந்தாதி முழுமையும் கட்டளை கலித்துறை என்ற யாப்பில் அமைந்தது. கட்டளைக் கலித்துறை பாடுவது என்பது சற்று கஷ்டம். அது எழுத்தெண்ணிப் பாடவேண்டும். அதைப் பாடிய அருளாளர் நம் பட்டர் மிகவும் அடக்கமாகத்தான் பாடியவை. வெறு உழறல்கள் என்று பணிகிறார். அதை,

வில்லவர் தம்முடன் வீற்று இருப்பாய்! வினையேன் தொடுத்த
சொல்லவம் ஆயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே
– என்கிறார்.

மேலும், தன்னைத் தாழ்த்தும்போது நாயுடன் ஒப்பிடுகிறார். நாய் மட்டும்தான் தன் எஜமானன் எந்த வேடத்திலிருந்தாலும் அறிந்துகொள்ளும். அத்துடன், விலங்குகளிலேயே நாய் மட்டும்தான் நன்றியுணர்வு மிக்கது. எனினும் நாம் யாரையாவது திட்டுவதாக இருந்தால் ‘சீ சிங்கமே, சீ புலியே’ என்று திட்டுவதில்லை. மாறாக, ‘சீ நாயே’ என்றுதான் திட்டுகிறோம். ஆகவே, அந்த அளவிற்குத் தான் தாழ்ந்தவன் என்று அம்பிகையின் கால்களில் கரைந்து போகிறார்.

நாய் மட்டும்தான், தான் உமிழ்ந்ததை மீண்டும் உண்ணும். அந்த அளவிற்கு இழிந்தவனாகத் தன்னை இளக்கிக் கொண்டு தன் தலையை முடை நாற்றம் வீசும் நாய்த்தலை என்று பாடுகிறார். மேலும், நாய் போன்ற என்னை நீ நினைவில்லாமல் ஏற்றுக் கொண்டாய். உன்னுடைய திருவடிக்கு நன்றி என்பதை,

நாயேனையும் இங்கு ஒருபொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய்
– என்கிறார்.

தான் ஏதுமற்ற காலிக்குடம்; நீ மட்டும்தான் பூரணமான பொற்குடம் என்று
நினைக்கும்போதுதான் அன்னையின் அருளை அனுபவிக்க முடியும்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post அபிராமி அனுபவம் appeared first on Dinakaran.

Tags : Abrami ,Gunkum ,Abirami ,Dinakaran ,
× RELATED நாதஸ்வர கலைஞரின் மகன் திருப்போரூர்...