×

இராமாயணம் கேட்டுத் திளைத்த இரகுநாதன் எனும் சேவகன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

‘‘நான் பிறந்து என் பெற்றோர்களுக்கு எந்தப் புகழ் கொடுத்தேனோ அறியேன். ஆனால், இரகுநாதன் பிறந்ததாலேயே நான் பெரும் புகழ் பெற்றேன்’’ – என்று கூறி பெருமிதம் அடைந்தான் தஞ்சை நாயக்க மன்னன் அச்சுதப்பன். இது முற்றிலும் உண்மையான வரலாறு. தன் வாழ்நாள் முழுவதும் இராம காவியத்திலேயே திளைத்து, எங்கெல்லாம் அறத்திற்கு ஊறு விளைகின்றதோ அங்கு சென்று அதனைக் களைந்து ராமனின் சேவகனாகவே வாழ்ந்து காட்டியவன் தஞ்சை மன்னன் விஜய ரகுநாத நாயக்கன்.

கோவிந்த தீட்சிதரைத் தன் ஆசானாகவும், மதி அமைச்சராகவும் கொண்டு சோழ மண்டலம் முழுதும் ஆண்ட இப்பெருமகன் மாவீரன், இசைவாணன், கவிஞன், கலைஞன் என்ற பெருமைகளோடு சிறந்த ராமபக்தனாகத் திகழ்ந்தவன். விஜயநகரப் பேரரசில் வேங்கடபதி ராயருக்குப் பின்பு, ஜக்கராயனின் சூழ்ச்சியால் ரங்கன் கொல்லப்பட்டு குழப்பம் விளைந்தபோது, முறையான வாரிசான ராமராயன் என்ற சிறுவனை யாசம நாயக்கன் என்ற அமைச்சர் ரகசியமாகக் காத்துப் பேரரசிற்கு முடிசூட்ட முயன்றான்.

அப்போது அறத்திற்கே துணை போகும் ரகுநாத நாயக்கன், யாசமனுக்கும் சிறுவன் ராமராயனுக்கும் துணைநின்று ஜக்கராயனைப் போரில் வீழ்த்தி, ராமராயனுக்குக் கும்பகோணத்தில் பட்டாபிஷேகம் நிகழ்த்தி, விஜயநகரப் பேரரசைக் காத்து நின்றான். ராமன், இலங்கை சென்று வென்றது போன்று, ரகுநாதனும், யாழ்ப்பாணம் சென்று பெரும் வெற்றி அடைந்தவன்.

கும்பகோணத்தில், ராமராயனுக்குப் பட்டாபிஷேகம் செய்ததின் நினைவாக, ராகவப் பெருமானுக்குப் பட்டாபிஷேகக் கோலத்திலேயே கோயில் எடுத்தான். இந்த ராமசாமி கோயிலினுள், அயோத்தி அண்ணல் அறத்தை, பரம தத்துவத்தை எடுத்துரைக்கும் ஆசானாகத் திகழ, அருகே மிதிலைச் செல்வி அமர்ந்திருக்க, இளவல் இலக்குவன் வணங்கி நிற்க, பரதன் கொற்றக்குடையும், சத்ருக்கன் கவரியும் ஏந்தி நிற்க, எதிரே அனுமன் ஓலைச் சுவடியை ஒரு கையில் கொண்டு, மறு கையால் யாழ் இசைக்கும் கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். அனுமன் ஏந்தியுள்ள யாழ், விஜய ரகுநாதன் கண்டுபிடித்த, ‘இரகுநாதேந்திர வீணை’ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ராமனாகவே வாழ்ந்து காட்டிய ரகுநாத நாயக்கனின் முழு வரலாற்றை சம்ஸ்கிருதத்தில், ‘இரகுநாதப்புதயம்’ என்ற நூலில் இராம பத்ராம்பா என்ற பெண்பாற் புலவர் சிறப்பாகக் கூறியுள்ளார். இதேபோன்று விஜயராகவ நாயக்கர் தன் தந்தையின் வரலாற்றைத் தெலுங்குமொழியில் ‘இரகுநாத நாயக்கப்புதயமு’ என்று இரண்டு நூல்களில் விவரித்துள்ளார். யக்ஞநாராயண தீட்சிதர் (கோவிந்த தீட்சிதரின் மகன்) ‘சாகித்ய ரத்னாகரம்’ என்ற நூலில் ரகுநாதனின் வரலாறு பேசுகிறார். இவ்வனைத்து நூல்களும் ரகுநாதனை நாள்தோறும் ராம காவியத்தைக் கேட்டு, திளைத்து மகிழ்பவன் என்று கூறுகின்றன. ராமாயண விரிவுரை கூறும் புலவர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் அளித்து மகிழ்வானாம். தன்னை ‘அநவரத ராம காதம்ருத சேவகன்’ என்று கூறிக் கொள்வதில் பெருமை காண்பானாம்.

கும்பகோணம் ராமசுவாமி திருக்கோயில் போன்று இம்மன்னவனின் உள்ளம் கவர்ந்த திருக்கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் திருக்கோயிலாகும். ரகுநாதன், இத்திருக்கோயிலுக்கு அளித்த அறக்கொடைகள் ஒன்றல்ல இரண்டல்ல…! இவனது ஆட்சியில் கண்ண மங்கையாம் திருக்கோயில் கற்றளியாக எடுக்கப்பட்டு, கி.பி.1621-ல் பக்தவத்சலனின் மகாபிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதை உண்ணாழியில் வெட்டப்பட்டுள்ள சம்ஸ்கிருதக் கல்வெட்டு விவரிக்கின்றது.

இக்குடநீராட்டு விழாவிற்கு முன்பே கி.பி.1608-ஆம் ஆண்டு செளமிய வருடம் பங்குனி மாதம் பதினெட்டாம் நாள் செவ்வாய்க் கிழமை, ஸ்ரீராம நவமியன்று ரகுநாத நாயக்கன் இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து திருப்பணிகள், நந்த வனம், திருவிளக்குகள், புனிதத் திருமஞ்சனம், பூஜைகள் போன்றவைகளுக்காக 60 வேலி நிலம் சர்வ மானியமாக சந்நதியில் எம்பெருமான் முன்பு தாரை வார்த்து அளித்தான்.

இப்புனித நிகழ்ச்சியை கல்வெட்டாக இருந்தால், படிக்கலாமே தவிர காண முடியாதே. இதைக் காட்சியாக நமக்குக் காட்ட நினைத்தான் தஞ்சையைச் சேர்ந்த லட்சுமண ஆச்சாரியின் மகன் வெங்கடாசல ஆச்சாரி. ஒரு செப்புத் தகட்டில் அன்று (கி.பி. 1608-ல்) ராம நவமியன்று பக்தவத்சல பெருமானின் சந்நதியில் ரகுநாதன் அறக்கொடை அளித்ததைக் கண்ட வெங்கிடாசல ஆச்சாரி, அக்காட்சியை அப்படியே ஓவியமாக வடித்தான். அது மட்டுமின்றி அன்று நிகழ்ந்த சிறந்த வரலாற்றுச் செய்தியையும், சாசனத்தையும், தல மகாத்மியத்தையும் அதே செப்பேட்டில் எழுதிக் கொடுத்தான்.

புகழ் வாய்ந்த இச்செப்பேடு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பகுதி ஓவியக் காட்சி, இரண்டாம் பகுதி தஞ்சை நாயக்கர்களைப் பற்றியது, மூன்றாம் பகுதி ஸ்தல மகாத்மியம், நான்காம் பகுதி ரகுநாதன் அளித்த 60 வேலி நிலம் பற்றிய சாசன விவரங்கள் அடங்கியதாகும். ஓவியப் பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் திருக்கண்ணமங்கை பெருமான் ஆழியும் சங்கும் கொண்டு நடுவே நிற்க, இருபுறமும் தேவியரும், வலப்புறத்தில் இலக்குமிதேவி ‘அபிஷேக வல்லி’த் தாயாராகவும், இடப்புறத்தில் நின்ற கோலத்தில் ஆண்டாளும் செப்பேட்டு ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளனர்.

இதன்கீழ் உள்ள இடைப் பகுதியில் காளிங்க நர்த்தன கிருஷ்ணன் நடுவே நிற்க, இடப்புறத்தில் நம்மாழ்வாரும், நான்முகனும், வலப்புறத்தே மான் மழுவேந்திய சிவபெருமானும் சூரியனும் தேவர்கள் சூழ எம்பிரானைத் துதிக்கும் கோலத்தில் காட்டப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கீழ்ப்பகுதியில் நடுவே கருடத் துவஜமும், அதன் இடப்புறத்தில் மன்னன் விஜய ரகுநாத நாயக்கன் கூப்பிய கரங்களுடன் நின்ற நிலையிலும், அவனது எதிரில் கோயில் பட்டர் கும்பதீபம் ஏந்தி ஆராதனை நடத்துகிறார். அவர்கள் அருகே மற்ற பட்டர்களும், அமைச்சர் மற்றும் வீரர்களது உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. ஓவியப் பகுதிக்குக் கீழே ‘ராம நீவேகதி, ராம ஜயம்’ – என குறிக்கப்பட்டுள்ளது.

செப்பேட்டின் இரண்டாம் பகுதியில் நாயக்க மன்னர்களின் பட்டங்களும், வம்ச வரிசையும் கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதி யான ஸ்தல மகாத்மியத்தில், திருப்பாற்கடலைத் தேவேந்திரனும் முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாமேருவையும் ஆதிசேஷனையும் கொண்டு கடையும்போது அமுதமான திருமகள் பிறந்ததாகவும், அத்திருமகளை வைகுந்தத்திலிருந்த திருமால் திருக்கண்ண மங்கையில் மணம்புரிந்து கொண்டார் என்றும், இதனால் தேவர்களும் கடவுளரும் அமிர்த புட்கரணி எனும் இத்திருக்குளத்தையும் அமிர்தவல்லித் தாயாரையும் இத்தலத்தில் கண்டு வணங்கினர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ருத்திரன் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் (12000 ஆண்டு தோஷம்) போக்க இத்திருக்குளத்தில் நீராடி, பெருமானைப் பூஜித்ததால் தோஷம் நீங்கப் பெற்றதாகவும், கிருத யுகத்தில் பிரம்மன் இவ்விறைவனை வணங்கி வேதம் பயின்றதாகவும், திரேதாயுகத்தில் பிருகு மகரிஷி வணங்கி மோட்சம் பெற்றதாகவும், துவாபரயுகத்தில் புருவஸர் பயன் பெற்றதாகவும், கலியுகத்தில் சூரியன் இங்கு வணங்கியதாகவும், சோமனும் மார்க்கண்டேயரும் முக்தி பெற்றது இத்தலத்திலே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான்காம் பகுதியில், (செப்பேட்டின் இரண்டாம் பக்கம் கடைசிப் பகுதி) அச்சுத விஜய ரகுநாத நாயக்கரால் சகம் 1530, கலி 4709 (கி.பி.1608) செளமிய வருஷம் பங்குனி மாதம் 18-ஆம் நாள் வியாழக்கிழமை ராம நவமியன்று இத்திருக்கோயிலில் தாரை வார்த்து அளிக்கப்பட்ட 60 வேலி நிலங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், இத்தர்மத்தைக் காப்பவர்கள் அடையும் பலனும், தர்மத்தை அழிப்பவர்கள் அடையும் பாபங்களும் கூறி, சந்திரன், சூரியன், வானம், மலைகள், காவிரி நதி உள்ள வரை இத்தர்மத்தைப் பின்பு வருபவர்கள் போற்றுங்கள் என்ற இம்மன்னனது உருக்கமான வேண்டுகோளும் கூறி, இச்செப்பேட்டைச் செதுக்கிய ஆச்சாரியின் ஊரும் பேரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமபிரானின் சேவகனாகவே இறுதி வரை வாழ்ந்து வரலாறு படைத்த அச்சுத விஜய ரகுநாத நாயக்கனின் சாதனைகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பெருமையுடையவையாகும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post இராமாயணம் கேட்டுத் திளைத்த இரகுநாதன் எனும் சேவகன் appeared first on Dinakaran.

Tags : Iragunathan ,
× RELATED திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்