×

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.

இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும். தென்இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Survey ,Chennai ,Nadu ,Meteorological Survey ,
× RELATED கொலை வழக்கில் சரணடைபவர்கள்...