×

டிச.1ம் தேதி முதல் ஆவின் டிலைட் பால் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும்: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1ம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 4.5% கொழுப்புச் சத்துள்ள ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் பதிலாக 3.5% கொழுப்புச் சத்து கொண்ட ஊதா நிற டிலைட் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்துவது ஏன்? என அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்தார். அதில், ஆவின் நீண்ட காலமாக வழங்கி வரும் பச்சை நிற நிலைபடுத்தப்பட்ட பாலை பொருத்தவரை பசும்பாலில் கூடுதலாக 1% கொழுப்பு சேர்த்து பதப்படுத்தி விற்கப்பட்டு வருகிறது.

இந்த கொழுப்பு இன்றைய வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேவையற்ற ஒன்றாகும். அதிலும் பல வாடிக்கையாளர்கள் கூடுதலாக கொழுப்பு அல்லது புரதம் உள்ளிட்ட திடப்பொருட்கள் சேர்ப்பதை விரும்பவில்லை எனவே தான் ‘Aavin for Healthy TN’என்ற அடிப்படையில் அதன் விற்பனையை மேலும் ஊக்குவிக்காமல் அதற்கு பதிலாக ஊதா நிற ஆவின் டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம். இந்த நடவடிக்கைகள் எதுவும் லாப நோக்கிலோ அல்லது வியாபார உத்தியாகவோ கையாளப்படவில்லை.

இன்றைய சூழலில் பசும்பாலின் தரம் எந்த விதத்திலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படாமல் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் மக்களின் ஆரோக்கியத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு வரும் முயற்சியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று ஆவின் நிர்வாகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆவின் டிலைட் பால் டிசம்பர் 1ம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும். மாதாந்திர அட்டைதாரர்களுக்கு டிலைட் பால் 500மி ரூ.21- க்கு விற்பனை செய்யப்படும். மூன்றரை சதவீத கொழுப்புடன் ஆவின் டிலைட் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மழைக் காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைத்திட ஆவின் டிலைட் மிகப் பெரிய பங்காற்றும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் பால்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உள்ளது. இந்த அமைச்சகத்தின் அமைச்சராக மனோ தங்கராஜ் உள்ளார். பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அதிக கொழுப்பு, நடுத்தர கொழுப்பு, குநை்த கொழுப்பு என்ற 3 வகைகளில் மக்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகள் பல்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

The post டிச.1ம் தேதி முதல் ஆவின் டிலைட் பால் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும்: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Avin ,Chennai ,Avin's Administration ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!