×

தடை செய்யப்பட்ட குட்கா விற்றால் வணிகர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை

*டிஎஸ்பி கடும் எச்சரிக்கை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரித்துள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு டன் குட்காவை, திருச்செங்கோடு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து, போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளுக்கு, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்படுவதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, நாமக்கல்லில் காவல்துறை சார்பில், மளிகை மற்றும் பலசரக்கு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நேற்று மாலை நடந்தது. இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்து பேசினார்.இதற்கு நாமக்கல் உட்கோட்ட டிஎஸ்பி தனராசு தலைமை வகித்து பேசியதாவது:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்றவற்றை, வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியமாகும். கடைகளில் எக்காரணம் கொண்டும், ரொக்கமாக பணம் வைத்து விட்டு செல்லக்கூடாது. கடை ஷட்டரில் சென்டர் லாக் பொருத்த வேண்டும். நாமக்கல் நகரில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க, காவல்துறை இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு, வணிர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நகர் முழுவதும் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள்ளது. நாமக்கல் காவல்நிலையத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறை மூலம், நகரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு டிஎஸ்பி தனராஜ் தெரிவித்தார்.

கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் பேசுகையில், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என வணிகர்கள் உறுதி எடுத்து கொள்ள வேண்டும். இதை மீறி குட்கா உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். காவல்துறைக்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில், நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணைத்தலைவர் ஜெகதீசன், பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மளிகை கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தடை செய்யப்பட்ட குட்கா விற்றால் வணிகர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Gutka ,DSP ,Namakkal ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே 800 கிலோ குட்கா பறிமுதல்..!!