×

வாழைக்காய் + வாயு = வதந்தி!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை வைத்தியம் என்பது நம்முடைய முன்னோர்களால் கடைபிடிக்கபட்டு வந்த உணவே மருந்து என்னும் அடிப்படையிலான இயற்கை மருத்துவ முறையாகும். இதன் அடிப்படையான விஷயமே நாம் சாப்பிடும் உணவையே நம்முடைய நோயைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துவதுதான். நம் முன்னோர்கள் உடலுக்கு எது நன்மையோ அதையே தங்களுடைய உணவு முறையாகப் பின்பற்றி வந்தனர்.

அப்படிப் பார்க்கும் போது வாழைக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருந்தாலும், வாழைக்காயை சாப்பிட்டால், வாய்வுத் தொல்லை உண்டாகும் என்னும் ஒரு வதந்தி இருக்கிறது.நம் முன்னோர்கள் வாழைக்காயை பல்வேறு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்

வாழைக்காயில் மிக அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. உணவில் வாழைக்காயை சேர்த்துக் கொண்டால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.

நீரிழிவு

வாழைக்காய் உணவில் சேர்த்துக் கொண்டால், பசி மிக விரைவாக அடங்கி விடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாழைக்காயில் சீரகமும் மிளகும் சேர்த்து சாப்பிட்டால்
உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

ரத்த விருத்திக்கு வாழைக்காயின் மேல் தோலை மட்டும் சீவி சமைத்தால், அதில் உள்ள நார்ச்சத்து முழுமையாக நம் உடலுக்கு வந்து சேரும். வாழைக்காயின் மேல் தோலை மெலிதாக சீவி எடுத்து அதை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி வைத்துக் கொண்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, சிறிது சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு 4 பல், உப்பு, நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றைச் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாகும். வயிறு இரைச்சல், வாயில் எச்சில் ஊறுதல், வயிற்றுப்போக்கு குணமாகும்.

வயிற்றுப்போக்கு

வாழைப் பிஞ்சினை நெய்யில் வதக்கி, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுப் போக்கு உடனடியாக நிற்கும்.ஏப்பம் சிலருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அதற்கு மிக முக்கியமான காரணமே அஜீரணக் கோளாறு தான். வாழைக்காயினை சின்னச் சின்ன வில்லைகளாக வெட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்து வர அஜீரணக் கோளாறு நீங்கும். உலர்த்திய வாழைக்காயுடன் சிறிது உளுந்து, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து இட்லி பொடி, சாதப்பொடி போலவும் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுக் கடுப்பு தீரும்.

– கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

The post வாழைக்காய் + வாயு = வதந்தி! appeared first on Dinakaran.

Tags :
× RELATED மனவெளிப் பயணம்