×

பக்கவாதத்தில் இருந்து மீண்டுவிடலாம்!

நன்றி குங்குமம் தோழி

வயதான காலத்தில் ஓய்வு எடுக்கலாம் என நினைப்பவர்களுக்கு இருக்கும் கவலையான விஷயம்தான் பக்கவாத நோய். இந்த நோய் வந்தால் சரியாக எந்த வேலையும் செய்ய முடியாமலும் நடக்கவும் பேசவும் முடியாமல் ஒரே இடத்தில் முடக்கிவிடும் இந்த கொடிய நோய். பக்கவாத நோயில் இருந்து தப்பிப் பிழைத்த மூன்றில் ஒரு பங்கு பேர் நிரந்தரமாக இயலாமைக்கு ஆளாகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 18 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் வாழ்நாளில் நான்கில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான சிகிச்சையளித்தால் இந்த நோயிலிருத்து விடுபடலாம் எனச் சொல்கிறார் காவேரி மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவரான டாக்டர் சுபா சுப்ரமணியன். பக்கவாத நோய் குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் அவர் விவரித்தார்.

‘‘பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு ரத்தம் செல்லாமல் இருப்பதால் ஏற்படும் ஒருவித நோய். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புகைபிடித்தல், இதய நோய், உடற் பருமன் போன்ற பிரச்னை உள்ளவர்களை இந்த நோய் தாக்குகிறது. இது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் முன் சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். உடல் சமநிலை இல்லாமல் இருப்பது, ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழப்பு, முகம் ஒரு புறமாக இழுத்துக்கொள்ளும், ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயல்பட முடியாமல் போகும், பேச்சில் குளறுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

பக்கவாதத்தில் இஸ்கிமிக் மற்றும் ஹெமோர்ராஜிக் என்னும் இரண்டு வகை உள்ளது. இஸ்கிமிக், மூளையில் உள்ள ரத்தக்குழாயில் ரத்த ஓட்டம் செல்லாமல் ஒரே இடத்திலேயே உறைவதால் ஏற்படுகிறது. ஹெமோர்ராஜிக் வகை பக்கவாதம் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் கசிவு காரணமாக ஏற்படுகிறது. இரண்டு வகைகளில் இஸ்கிமிக் வகை பக்கவாதத்தால்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். நமது உடலில் பெரிய ரத்த நாளங்கள், சிறிய ரத்தநாளங்கள் இருக்கின்றன.

இதில் இரண்டு ரத்த நாளங்களில் எதில் வேண்டுமானாலும் அடைப்பட்டு பக்கவாதம் ஏற்படலாம். உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதன் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் தாக்குகிறது. இதிலும் சிறிய ரத்த நாளங்களில்தான் பல பேருக்கு அடைப்பு ஏற்படுகிறது. சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக ஏற்படும் பக்கவாதத்தைவிட பெரிய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பால் வரும் பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டவுடன் ஒரு நொடிக்கு சுமார் 30000 நியுரான்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனாலேயே பக்கவாதம் ஏற்பட்டவர்களால் செயல்படமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஒரே இடத்தில் முடங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. பக்கவாதம் ஒரு உயிர் கொல்லி நோய் அல்ல. ஆனால் நம்மை ஒரே இடத்தில் முடங்க வைக்கக்கூடியது. இதனாலேயே பக்கவாதம் கொடிய நோய் என்று சொல்கிறோம். பக்கவாதம் கொடிய நோய் என்றாலும் இதை குணப்படுத்தக் கூடியதுதான். இந்த பக்கவாத நோய் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கே வருகிறது. சில சமயங்களில் புகை பிடிக்கும் பழக்கமுடைய இளைஞர்களுக்கும் இந்த நோய் பாதிக்கிறது’’ என்றவர் அதன் சிகிச்சை முறைகள் பற்றி விவரித்தார்.

‘‘இந்த ேநாய் பாதிப்பு ஏற்பட்டால் அதனை இரண்டு வகையான சிகிச்சைகள் கொண்டு தீர்வு காணலாம். திரோம்போலிசிஸ் என்ற சிகிச்சையளிப்பதற்கு முன் பக்கவாதம் வந்த நோயாளிகளுக்கு CT அல்லது MRI ஸ்கேன் செய்ய வேண்டும். அதில் அவர் எந்தளவிற்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கண்டறிய முடியும். மேலும் எந்த ரத்த நாளங்களில் அடைப்புள்ளது என ஆராய்ந்து அதற்கான சிகிச்சைகளை தொடங்கலாம்.

மூளையில் ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தை முடிந்தவரை விரைவாக மறுசீரமைத்தால் மூளையைக் காப்பாற்றி பக்கவாதத்தை சரி செய்ய முடியும். ரத்த அடைப்பினை ஊசி மூலம் மருந்து செலுத்தி கட்டிகளை கரைத்து விடுவோம். சிலருக்கு மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி சிகிச்சையளிப்போம். தொடையில் அல்லது மணிக்கட்டில் உள்ள ரத்தக்குழாய் வழியாக ஒரு வடி குழாயானது முன்னேறி மூளையின் ரத்தக் குழாயில் உள்ள ரத்தக் கட்டியை அடையும்.

இவை அனைத்தும் சிறப்பு எக்ஸ்ரே இமேஜிங் (Cathlab) வழிகாட்டுதல் மூலம் செய்யப்படுகின்றன. ரத்த நாள கட்டியை அகற்றக்கூடிய ஒரு மெல்லிய இயந்திர கருவியான ஸ்டென்ட் ரிட்ரீவர் ரத்தம் உறைந்த இடத்தில் அடைப்பை உறிஞ்சி ரத்த ஓட்டத்தை சீர் செய்திடும். பக்கவாதம் வந்த 4 1/2 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் ரத்த உறைவைக் கரைக்கும் மருந்தை செலுத்தி சரி செய்யலாம். பக்கவாத அறிகுறி தென்பட்ட 4 1/2 மணி நேரத்திற்குள் நோயாளிகளை உடனடியாக அருகில் உள்ள ‘ஸ்ட்ரோக் ரெடி சென்டருக்கு’ கொண்டு செல்வது நல்லது. பக்கவாதம் சிறிய அளவில் இருந்தால் இரண்டு முதல் மூன்று நாட்களிலேயே சிகிச்சையளித்து வீட்டிற்கு சென்று விடலாம்.

அதுவே பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று பிறகு அவ்வப்போது செக்கப்பிற்காக வந்து செல்லலாம். பக்கவாத நோய் உடனே குணப்படுத்த முடியாது. நோயின் தன்மையை பொறுத்து 6 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை சிகிச்சையளித்தால் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்து விடலாம். பக்கவாத நோய்க்கு சிகிச்சையளிக்கும் போது அவர்கள் ஏற்கனவே உள்ள நோய்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

அதனால் அந்த நோய்களுக்கும் சேர்த்துதான் சிகிச்சையளிக்கப்படும். பக்கவாத நோயிலிருந்து மீண்டவர்கள் திரும்பவும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, புகைபிடிப்பதைத் தவிர்த்து, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்தால் மட்டுமே மீண்டும் பக்கவாதம் வராமல் தடுக்கலாம்’’ என்கிறார் டாக்டர் சுபா சுப்ரமணியன்.

The post பக்கவாதத்தில் இருந்து மீண்டுவிடலாம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!