×

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்துக்கு டிரோன்களை இயக்க அதிக பைலட்கள் தேவை:900 டிரோன்களுக்கு ஆர்டர் வந்துள்ளது, வல்லுநர்கள் கோரிக்கை

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தின் டிரோன்களை இயக்க அதிக பைலட்கள் தேவைப்படுகின்றனர். இதற்கான முறையான பயிற்சியை வழங்க அரசு ஒரு அகாடமியை உருவாக்க வேண்டும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் டிரோன் அடிப்படையிலான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டது தான் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம். 2021-2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் விமானங்களுக்கென தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 2022ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை தொடங்கி வைத்தார்.

சட்ட அமலாக்கம், சுரங்கம், வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மேம்பாடு, நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள், பேரிடர் மேலாண்மை, சுகாதாரம், வனவியல், தொல்லியல், சுற்றுச்சூழல் ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளை இது உள்ளடக்கும். தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் 100% அரசுக்குச் சொந்தமான நிறுவனமாக, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான டிரோன்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் வர்த்தகம் செய்வதைத் தவிர விவசாய பூச்சிக்கொல்லி தெளித்தல், கண்காணிப்பு, வரைபடம் உருவாக்குதல், தேடல் மற்றும் மீட்பு, அளவீட்டு பகுப்பாய்வு போன்ற சேவைகளையும் இக்கழகம் பல்வேறு துறைகளுக்கு வழங்கும்.

பல்வேறு நிறுவனங்களுக்கு இக்கழகத்தால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் தற்போது சென்னையின் முக்கிய நீர்நிலைகளில் கொசு உற்பத்தியைத் தடுக்க மருந்துகளைத் தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சிக்காக டிரோன்கள் மூலம் நிறைவு செய்துள்ளது. க்ரிஷி விக்யான் கேந்திராவுக்கு வேளாண் தெளிப்பான் டிரோன்களையும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு 50 கண்காணிப்பு டிரோன்களையும், கடலோரப் பாதுகாப்புக் குழு மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு விநியோக டிரோன்களையும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குப் பூச்சிக்கொல்லி தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளது.

டிரோன்களும் இக்கழகத்தால் இன்று வரை, தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் ரூ.2.25 கோடி மதிப்பிலான திட்டத்தை நிறைவு செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சதுப்பு நிலங்களை வரைபடமாக்குதல், தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவிற்கு விநியோக மற்றும் கண்காணிப்பு டிரோன்கள் வழங்குதல், தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படைக்கு ஆளில்லா வான்வழி வாகனங்களை வழங்கல் போன்றவற்றிக்கு இக்கழகம் முன்மொழிந்துள்ளது. ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்தி மூன்று கனிம பகுதியை வரைபடமாக்கி, தமிழ்நாடு கனிமத் துறையிடம் ஒப்படைத்தல் போன்ற பல்வேறு இக்கழகத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழக அதிகாரிகள் கூறுகையில், வேளாண் பல்கலை கழகங்கள், மாநகராட்சி, காவல்துறை, தனியார் நிறுவனங்கள் என பலருக்கும் இங்கிருந்துதான் டிரோன்கள் வழங்கப்படுகிறது. டிரோன்களை முறையாக இயக்க பைலட்டுகள் தேவை. முறையான பயிற்சி பெற்று அதற்கான உரிமம் இருந்தால்தான் தான், இதனை கையாள முடியும். ஆனால் டிரோன் பைலட்டுகள் குறைவாக உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் இதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

அதுபோக பல தனியார் கல்லூரிகள் இந்த படிப்பை வழங்குகின்றனர். அனைவராலும் தனியார் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்தி இந்த படிப்பை பெற முடியாது. எனவே அதிக அளவிலான டிரோன் பைலட்டுகள் தேவைப்படும், இந்த நேரத்தில் இதற்கான படிப்பை அதிகபடுத்த வேண்டும். தமிழ்நாடு பாதுகாப்புதுறைக்கு ரூ. 220 கோடிக்கு 400 டிரோன்கள், வேளாண் துறைக்கு ரூ.45-50 கோடியில் 700 டிரோன்கள் தயாரிக்க ஆர்டர் வந்துள்ளது. பாதுகாப்புதுறைக்கான டிரோன்கள் வரும் ஜனவரி மாதத்தில் டெலிவரி செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

* கட்டமைப்பு அவசியம்
கல்வியாளர்கள் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், டிரோன் பைலட்டுகளுக்கு பயிற்சிகள் வழங்குவதில் சரியான கட்டமைப்புகள் இல்லை. ப்ளையிங் ஸ்கூல் தனியாக இருப்பதுபோன்று டிரோன் பைலட்டுகளுக்கென தனியான அகாடமியை அரசு உருவாக்க வேண்டும். எப்படி 1ம் வகுப்பில் தொடங்கி ஒவ்வொரு வகுப்பாக முன்னேறுகிறோமோ, அதேபோல் ஸ்டேஜ் 1, ஸ்டேஜ் 2 என இந்த பயிற்சியை முடிக்கும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் சிறப்பான டிரோன் பைலட்டுகளை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்துக்கு டிரோன்களை இயக்க அதிக பைலட்கள் தேவை:900 டிரோன்களுக்கு ஆர்டர் வந்துள்ளது, வல்லுநர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU UNMANNED AERIAL VEHICLE CORPORATION ,Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!