×

இளைய தலைமுறையினருக்கும் வந்தாச்சு மூட்டுவலி பிரச்னை

விஞ்ஞானம் வளரவளர தொழில்நுட்பம் வளரவளர நோய்களும் அதிகரித்து வருகின்றன. ஒரு காலகட்டத்தில் நமது தாத்தா, பாட்டி அல்லது அப்பா, அம்மாவிற்கு வந்த நோய்கள் தற்போது வயது வரம்பின்றி இளைய தலைமுறையினரையும் எளிதில் தொற்றிக் கொள்கிறது. ஒரு காலகட்டத்தில் 60 வயதுக்கு மேல் தாத்தா, பாட்டி கால் வலிக்கிறது, மூட்டு வலிக்கிறது என கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதன்பின்னர் நமது பெற்றோர் 50 வயதை அடையும்போது இதை சொல்ல கேட்டிருப்போம்.

ஆனால், தற்போது முப்பது வயதை எட்டும் இளைஞர்களும் பெற்றோரிடம் கை, கால், மூட்டு வலிக்கிறது, வேலையே செய்ய முடியவில்லை என குமுறுவதை கேட்கும் சூழ்நிலை வந்துள்ளது. அந்த அளவிற்கு இயந்திரமயமான வாழ்வில் ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு பொருள் தேடும் ஒரு முனைப்பில் இளைய தலைமுறையினர் இருந்து வருகின்றனர். இதனால், அவர்கள் இழப்பது தங்களது ஆரோக்கியம் மட்டுமல்ல, சந்தோஷம், உடல்நலம் அனைத்தையும் இழக்கிறார்கள் என்பதை ஒரு காலகட்டத்தில் இயற்கை அவர்களுக்கு புரிய வைத்து விடுகிறது.

அந்த வகையில்…. தற்போது வயதானவர்கள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரையும் மூட்டு வலி பிரச்னை ஆட்டிப்படைக்க தொடங்கி விட்டது. ஒரு வேலையை செய்ய தொடங்கினால் தொடர்ந்து அந்த வேலையை செய்ய முடியாமல் நிறுத்தி விடுவது, இரண்டு மாடி கொண்ட அலுவலகத்தில்கூட படிக்கட்டில் ஏற முடியாமல் லிப்ட்டில் செல்வது, ஒரு கி.மீ. தொலைவில் பள்ளிகள் இருந்தாலும் குழந்தைகளை அழைத்துச் செல்ல ஆட்டோ அல்லது இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவது போன்ற பல்வேறு பிரச்னைகளில் இளைய தலைமுறையினர் தற்போது சிக்கி வருகின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒன்றே ஒன்றுதான். மூட்டு வலிக்கிறது, கை, கால் வலிக்கிறது, முடியவில்லை…என்பதே.

எதனால் மூட்டு வலி வருகிறது, கை, கால் வலி வருகிறது. அதற்கு நிரந்தர தீர்வு என்ன என்பதை ஒருபோதும் அறிந்து அதற்கான தீர்வை நோக்கி செல்வதில்லை. எப்போதாவது அதிகமாக மூட்டு வலி ஏற்பட்டால் அதற்கு மட்டும் மருத்துவர்களிடம் சென்று ஊசி போட்டு, வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வலிக்கு தற்காலிக தீர்வை நோக்கி பலரும் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு நோய் வந்தால் அந்த நோய் எதனால் வருகிறது என்பதை பற்றி ஆராயாமல் உடனடி நிவாரணம் அல்லது என்ன மருந்து சாப்பிட்டால் அது சரியாகும் என இளைய தலைமுறையினர் பலரும் தவறான கண்ணோட்டத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். காய்ச்சல், சளி, தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு தற்காலிக தேடல்கள் ஒரு தீர்வாக அமையும். ஆனால், மூட்டு வலி போன்ற நோய்களை பொறுத்தவரை எதனால் வருகிறது என்பதை தீர அலசி ஆராய்ந்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.

உதாரணத்திற்கு, ஒருவர் 120 கிலோ எடையுடன் வாழ்கிறார் என்றால் கண்டிப்பாக அவருக்கு உடல் பருமனால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு அதிக வலி இருக்கும். இதற்கு அவர் மூட்டு வலி மாத்திரைகளை சாப்பிட்டால் சரியாகாது. மாறாக, உடல் எடையை குறைத்து தேவையான மூட்டு பயிற்சி செய்தால் கண்டிப்பாக மூட்டு வலியிலிருந்து தப்பிக்கலாம். உடல் எடையை குறைக்காமல் வெறும் மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு விட்டு எனக்கு வலி சரியாகவில்லை என்றால் எப்படி? இதுபோன்று தான் பல இளைஞர்களும் இன்று நோய்கள் எதனால் வருகிறது என்பதை அறியாது, அதற்கு தீர்வு வேண்டும் என்ற நோக்கிலேயே மருத்துவர்களை அணுகுகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனைகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

மூட்டு வலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் பிரச்னை என பலரும் நினைக்கின்றனர். வயதாகும்போது உடல் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்கும். இதனால் மூட்டு வலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. எனவே உடல் சார்ந்த பிரச்னைகள் வரும்போது மூட்டு வலி அதிகரிக்கும். மூட்டு வலியை வயதான காலத்தில் மட்டுமே ஏற்படும் ஒரு உடல் உபாதை என எடுத்துக் கொள்ளக் கூடாது. பெரம்பூரை சேர்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ் கூறியதாவது: உலக அளவில் 600 மில்லியன் மக்களுக்கு மேல் மூட்டு எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முழங்கால் மூட்டு தவிர இடுப்பு, தோள்பட்டை, கணுக்கால் மூட்டு என இதர மூட்டுகளும் பாதிப்படையும். ஆண், பெண் என 40 வயது முதல் 50 வரையிலான மக்களுக்கு தற்போது இந்த பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் அதிகமாக மூட்டு வலி பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

மூட்டு வலி பிரச்னைக்கு விபத்தில் ஏற்படும் காயங்கள் மற்றும் பிற நோய்கள், காச நோய் போன்றவையும் ஒரு காரணமாகிறது. தற்போது மூட்டு ஜவ்வு தேய்மானம் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், சிறு வயதினர்களுக்கும் காணப்படுகிறது. இதன் முக்கிய காரணமாக உடல் பருமன் உள்ளது. அதிக உடல் எடையால் மூட்டு எலும்புகளில் அதிக அழுத்தம் உண்டாகி ஜவ்வு தேய்ந்து விடுகிறது. இதை கட்டுப்படுத்த சரியான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தேவையான நீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு காய், கனிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனையோடு முறையான நடை பயிற்சியும் அவசியம்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல், ஒரே வேலையை ஓய்வின்றி திரும்ப திரும்ப செய்தலை தவிர்க்க வேண்டும். மூட்டு வலி பிரச்னை ஏற்பட்டு விட்டால் தக்க மூட்டு சிகிச்சை நிபுணரை அணுகி நோயின் நிலையை கண்டறிந்து, மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தானாகவே வலி நிவாரண மாத்திரைகளை எப்போதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.எனவே மூட்டு வலியை பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால் மூட்டு வலி தீவிரமடைந்து அதன் பின்பு நாம் அவதிக்குள்ளாக வேண்டிய அவசியம் இருக்காது. நோய் முற்றிய நிலையில், மூட்டு வளைந்து சாய்ந்து மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அவ்வாறு ஒரு சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் தாராளமாக அவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். சிலர் யூடியூப் சேனல்களை பார்த்து மூட்டு பயிற்சிகளை தாங்களாகவே வீட்டில் செய்து கொள்கின்றனர். அவ்வாறு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் செய்யக்கூடாது. மூட்டு பயிற்சி என்பது நம் தசைகளையும் மூட்டுகளையும் வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே மருத்துவர்களின் ஆலோசனை பெற்று, பயிற்சிகளை செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மூட்டு வலி பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post இளைய தலைமுறையினருக்கும் வந்தாச்சு மூட்டுவலி பிரச்னை appeared first on Dinakaran.

Tags :
× RELATED நாளை பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது:...