×

சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது; உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது; உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் நிதி நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டின் முதன்மைக் கட்டமைப்புத் திட்டமான விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எந்தக் காரணமும் தடையாக இருக்கக்கூடாது. கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் வட எல்லையான எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 50 கி.மீ பயணிக்க வேண்டும்.
அதற்கு வசதியாக பொதுப்போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பேருந்து வசதிகளை ஒரு கட்டத்திற்கு மேல் அதிகரிக்க முடியாது என்பதால், புறநகர் தொடர்வண்டிகள், மெட்ரோ தொடர்வண்டிகள் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்க முடியும். அதற்கு கிளாம்பாக்கம் முதல் ஏற்கனவே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் வரை புதிய தொடர்வண்டிப் பாதை ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
கிளாம்பாக்கம் – விமானநிலையம் இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 2021ம் ஆண்டே தயாராகி விட்டது.

அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஓராண்டிற்கு மேல் ஆனது. மொத்தம் ரூ.4080 கோடி தேவைப்படும் 15.30 கி.மீ நீளம் கொண்ட இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தான் முழுமையாக நிதி வழங்க வேண்டும். ஏற்கனவே ரூ.61,843 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்காததால், அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.10000 கோடியை தமிழக அரசே ஒதுக்கி வருவதாகவும், இத்தகைய சூழலில் கிளாம்பாக்கம் – விமான நிலையம் திட்டத்திற்கும் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த நிதி தடையாக இருக்கக் கூடாது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசிடம் நிதி கோரி 2 ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் ஒன்றிய அரசு அதன் பங்கு நிதியை வழங்க வேண்டும். தமிழக அரசும் பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் நிதியுதவி பெற்றாவது விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போடக்கூடாது; உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport ,Clambakkam Metro Rail ,Anbumani Ramadoss ,CHENNAI ,Clambakkam Metro ,Clambakkam ,Dinakaran ,
× RELATED விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ கையில்...