×

வேலூர் விமான நிலையத்தில் காலிபர் விமானம் மூலம் லைட்டிங் சிக்னல் ஆய்வு: டெல்லியில் இருந்து வருகை


வேலூர்: மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் வேலூர் விமான நிலையம் உட்பட கைவிடப்பட்ட சிறிய விமான நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பு கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. இதில் வேலூர் அப்பதுல்லாபுரம் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர ₹65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. விமான நிலையத்திற்கு சொந்தமாக இருந்த 46 ஏக்கருடன் அரசு புறம்போக்கு நிலம் 52 ஏக்கரை கையகப்படுத்தி மாநில அரசு கொடுத்த நிலையில் தற்போது 97 ஏக்கர் பரப்பளவில் 850 மீட்டர் ஓடுதளத்தில் 748 மீட்டரை விமானங்கள் இறக்கி, ஏற்றவும், மீதமுள்ள இடத்தில் விமான முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய நிர்வாக அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள், பாதுகாப்பு இடம் என 90 சதவீத பணிகள் முடிந்து.

தற்போதைக்கு 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு இயக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது. தற்போது விமான நிலைய சுற்றுச்சுவர் பணிகளும், சிசிடிவி கேமரா பொருத்தும் இறுதிக்கட்ட பணிகளும் நடந்து வருகிறது. விமான நிலையத்தில் பணியாற்ற உள்ள தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சியும் சென்னை விமான நிலைய ஆணைய குழுமத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தை இயக்குவதற்கு லைசென்ஸ் பெற விண்ணப்பித்துள்ளனர். அதேநேரத்தில் விமான நிலையத்துக்கு தேவைப்படும் 10 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மீண்டும் விரைவுப்படுத்தி இந்த ஆண்டுக்குள் இங்கிருந்து விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இதற்காக விமான நிலைய ஓடுதளப்பாதையின் அருகே விமானங்கள் இறங்குவதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பகல் வேளையில் சரியாக எரிகிறதா? என்றும், விமானத்தில் இருந்து தகவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிக்னல் கோபுரத்தில் இருந்து சிக்னல் கோபுரத்தில் இருந்து கிடைக்கிறதா? என முதல்கட்ட சோதனை நேற்று நடந்தது. இதற்காக டெல்லியில் இருந்து காலிபர் ரக விமானம் சென்னை வழியாக வேலூர் விமான நிலையம் வந்தது. இந்த விமானம் குறிப்பிட்ட உயரத்தில் 10க்கும் மேற்பட்ட முறை தாழ்வாக பறந்தும், குறிப்பிட்ட உயரத்தில் இருந்து சிக்னல்கள் கிடைக்கிறதா என்றும் சோதனை மேற்கொண்டது. மேலும் இந்த சோதனையை டெல்லியில் இருந்து வந்திருந்த தேசிய விமான கட்டுப்பாட்டு ஆணையத்தை சேர்ந்த 3 பேர் ஆய்வு செய்தனர். முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமான நிலைய ஓடுதளம் அருகில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

The post வேலூர் விமான நிலையத்தில் காலிபர் விமானம் மூலம் லைட்டிங் சிக்னல் ஆய்வு: டெல்லியில் இருந்து வருகை appeared first on Dinakaran.

Tags : Vellore Airport ,Delhi ,Vellore ,Udhan ,Caliber ,Dinakaran ,
× RELATED விமானதுறை இயக்குனர் ஆய்வு செய்ததும்...