×

விழுப்புரம் அருகே ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி காதலனை கொல்ல முயற்சி: காதலியின் உறவினர் வெறிச்செயல்

விழுப்புரம்: ரயில் நிலையம் முன் நண்பருடன் அமர்ந்திருந்த காதலன் மீது காதலியின் உறவினர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தை சேர்ந்தவர் பரணிதரன்(23). பட்டதாரி. நேற்று தனது நண்பர் பிரசாந்துடன் கண்டம்பாக்கம் ரயில் நிலையம் முன், மரத்தடியில் செல்போனுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நாராயணன்(38), பரணிதரன் மீது திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க வைத்துள்ளார். இதில் பரணிதரன் முகம், உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனிருந்த பிரசாந்த் விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் வந்து பரணிதரனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பரணிதரன் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இருவீட்டாரும் சம்மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். முதுகலை பட்டம் படிக்க ஆசைப்பட்டு இருவரும் விண்ணப்பித்திருந்தார்களாம். இதனிடையே அந்த பெண்ணின் உறவினர் நாராயணன், இவர்களின் காதலுக்கும், திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன், பரணிதரனை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்தும் வழக்கு உள்ளது. இந்த நிலையில் தான், பரணிதரன் மீது வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சித்துள்ளார் என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிந்து நாராயணனை தேடி வருகின்றனர்.

The post விழுப்புரம் அருகே ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி காதலனை கொல்ல முயற்சி: காதலியின் உறவினர் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,
× RELATED ‘சான்றிதழ் வேணும்னா என் கூட சந்தோஷமா...