சென்னை: தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மிலாடி நபி முதல் காந்தி ஜெயந்தி வரை தொடர் விடுமுறையால், முக்கிய சுற்றுலாத்தலங்கள், கோயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. திருவண்ணாமலை: புரட்டாசி மாத பவுர்ணமி மற்றும் கடந்த 28ம் தேதி முதல் தொடர் விடுமுறை என்பதால் அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பொது தரிசன வரிசை, வெளிப்பிரகாரத்தையும் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டு இருந்தது. அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதன் காரணமாக, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. எனினும் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடப்பதால், பெரிய தெரு, பேகோபுர தெருக்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுமதிக்கப்பட்டன. எனவே தேரடி வீதி மற்றும் கடலைக்கடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் இன்றும் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நான்கு கோபுர வாசல்களிலும் வரிசையில் காத்திருந்து சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. அம்மன், சுவாமியை 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சித்திரை வீதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக்கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வாகனங்கள் அடிவார பகுதியில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோப் கார் இயங்காததால், வின்ச் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் ஆனது. இதேபோல் மதுரை மாவட்டம் அழகர்கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட தென்மாவட்ட முக்கியக் கோயில்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் என மூன்று மதங்களை சேர்ந்த யாத்ரிகர்கள், சுற்றுலா பயணிகள் தொடர் விடுமுறை காரணமாக குவிந்தனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் வெளி மாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் நேற்று குவிந்தனர். வெயிலின் கொடுமையால் அவர்கள் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர். சிலர் தங்களது குழந்தைகளின் பிறந்தநாளை வேளாங்கண்ணி கடற்கரையில் கேக் வெட்டி கொண்டாடினர். தஞ்சாவூர்: உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நேற்று காலையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பெருவுடையாரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே கார், வேன்களில் திருச்செந்தூரில் குவியத் துவங்கினர். இதனால் நேற்று அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன. அதிகாலை முதலே பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, நீண்ட வரிசையில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிக கூட்டம் குவிந்ததால் ரூ.100 கட்டன தரிசன வரிசை, சன்னதி தெருவிலிருந்து சுமார் ஒரு 1 கிமீ தொலைவுக்கு நீண்டிருந்தது. பொது தரிசனத்திற்கு வந்தவர்கள் தெற்கு டோல்கேட் வரை வரிசையில் நின்று சுமார் 5மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய கோயில்களில் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post தொடர் விடுமுறையால் குவிந்தனர் முக்கிய கோயில்களில் பக்தர்கள் அலைமோதல்: பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.