×

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,898 ஆக நிர்ணயம்

சேலம்: நாடு முழுவதும் இம் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதே சமயம், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் ரூ.1,898க்கு விற்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை, தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. இதனால், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் ரூ.1,100க்கு மேல் விற்கப்பட்டது. இதன் காரணமாக, இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிலிண்டர் விலையை குறைக்க எதிர்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தனர். இதனால், டெல்லியில் ரூ.1103ல் இருந்து ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.903 ஆகவும், மும்பையில் ரூ.1,102.50ல் இருந்து ரூ.902.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,129ல் இருந்து ரூ.929 ஆகவும், சென்னையில் ரூ.1,118.50ல் இருந்து ரூ.918.50 ஆகவும் குறைக்கப்பட்டது. பிறகு கடந்த மாதம் (செப்டம்பர்), வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.157.50 முதல் ரூ.166.50 வரை குறைத்தனர்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான (அக்டோபர்) புதிய விலை பட்டியலை, நேற்று அதிகாலை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், கடந்த மாதத்தை போலவே சென்னையில் ரூ.918.50 ஆக நீடிக்கிறது. ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 முதல் ரூ.209 வரை அதிகரிக்கப்பட்டது. இதனால், அதன் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்கப்பட்ட வர்த்தக காஸ் சிலிண்டர், ரூ.203 அதிகரிக்கப்பட்டு ரூ.1,898 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் ரூ.1,643.50ல் இருந்து ரூ.203.50 அதிகரித்து ரூ.1,847 ஆகவும், டெல்லியில் ரூ.1,522.50ல் இருந்து ரூ.209 அதிகரித்து ரூ.1,731.50 ஆகவும், மும்பையில் ரூ.1,482ல் இருந்து ரூ.202 அதிகரித்து ரூ.1,684 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,636ல் இருந்து ரூ.203.50 அதிகரித்து ரூ.1,839.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களிலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்றனர்.

The post வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.203 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1,898 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED சேலத்தில் இருந்து சென்னைக்கு 80 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் வந்தது