×

குறைந்த ஓட்டில் தோற்ற 160 தொகுதிகள் உட்பட பாஜகவில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தேர்வு: 10 பேர் கொண்ட தேர்தல் குழு நியமனம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்காக பாஜக சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை தேர்வு ெசய்ய 10 பேர் கொண்ட தலைவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரலில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணி தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. மாநிலம் வாரியாக தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரசார யுக்திகள் குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

இதுகுறித்து பாஜக தேசிய தலைவர்கள் கூறுகையில், ‘நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளிலம் பாஜகவின் செல்வாக்கு குறித்தும், ெவற்றி வாய்ப்பு குறித்தும் ஆய்வு நடத்த தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சால் தலைமையில் 10 தலைவர்கள் கொண்ட குழுவை தேசிய தலைமை அறிவித்துள்ளது. அவர்கள் மாநிலம் வாரியாக சென்று, மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்வார்கள். குறிப்பாக வேட்பாளர்களையும் அடையாளம் காண்பார்கள். வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் வேட்பாளர்கள் தொடர்பான அறிக்கையை கட்சித் தலைமையிடம் ஒப்படைப்பார்கள்.

கட்சியின் முன்னாள் துணை முதல்வர் தினேஷ் சர்மா, இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதால், அம்மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்தி உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தேர்வு செய்யப்படும். பெரிய மாநிலங்களில் டிசம்பர் 1ம் தேதிக்குள்ளும், சிறிய மாநிலங்களில் ஜனவரி 1ம் தேதிக்குள்ளும் வேலைகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 160 மக்களவை தொகுதிகளில் பாஜக பலகீனமாக உள்ளது. மேற்கண்ட தொகுதிகளில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோற்றது. அதனால் அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த தன்னார்வ மற்றும் முழுநேர தொண்டர் படையை உருவாக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்ப்புடையவர்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றனர்.

The post குறைந்த ஓட்டில் தோற்ற 160 தொகுதிகள் உட்பட பாஜகவில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தேர்வு: 10 பேர் கொண்ட தேர்தல் குழு நியமனம் appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Election Committee ,New Delhi ,Dinakaran ,
× RELATED சம்பாதிக்க கல்வி தகுதி கொண்ட பெண்,...