×

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி

ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 50மீ துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய மகளிர் அணி 337 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.

சீனாவில் ஹாங்சோவ் நகரில் 19ஆம் ஆசிய சாம்பியன் விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8ஆம் நாளான இன்று நடைபெற்ற போட்டிகளில் கோல்ப் விளையாட்டில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட அதிதி அசோக் வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

நேற்று வரை மற்ற தகுதி சுற்று போட்டிகளில் முதலிடத்தில் இருந்து வந்த அதிதி அசோக் , இறுதி போட்டியில் சற்று தடுமாறியதால் 2ஆம் இடமே பெற்றார். பெண்கள் ஒற்றையர் கோல்ப் பிரிவில் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். தாய்லாந்தின் யுபோல் அர்பிச்சாயா அதிதி அசோக்கை முந்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கோல்ப் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை அதிதி அசோக் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் கினான் டேரியஸ் சென்னாய், ஜோரவர் சிங் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியினர் Trap-50 Shots துப்பாக்கி சுடுதல் விளையாட்டு பிரிவில் 361 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றனர். இந்த போட்டியில் குவைத் வெள்ளிப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. மேலும், கினான் மற்றும் ஜோரவர் ஆகியோர் ஆண்கள் ட்ராப் தனிநபர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், பெண்கள் ட்ராப் டீம் பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, மனிஷா கீர் மற்றும் ப்ரீத்தி ரஜக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். சீன அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றனர். தனிநபர் இறுதிப் போட்டிக்கான ஷூட்-ஆஃப் போட்டியில் மனிஷா கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதக்கங்கள் மூலம் இந்தியாவின் பதக்க பட்டியலில் 11 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கல பதக்கம் உட்பட மொத்தமாக 41 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா 4ஆம் இடத்தை பெற்றுள்ளது.

The post ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி appeared first on Dinakaran.

Tags : Asian Sports Match ,Indian Women's Team ,Hangzhou ,Asian Sports Competition ,Dinakaran ,
× RELATED சீன ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம்...