×

மனித கழிவுகளை மனிதனே அகற்றினால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர், செப். 30: அரசின் விதிமுறைகளை மீறி குடியிருப்பு வாசிகள், கடை, ஓட்டல் முதலாளிகள் மனிதர்களைக் கொண்டு நச்சுத் தொட்டியை (செப்டிக் டேங்க்) சுத்தம் செய்தால் அபராதம் விதிக்கப்படும். கழிவு நீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட வேண்டும் என நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மொத்தம் 427 தெருக்கள் உள்ளன. இந்த 427 தெருக்களையும் தூய்மைப்படுத்த 173 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி பகுதியில் குடியிருப்புகள், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள நச்சுத் தொட்டிகளை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் மற்றும் நகராட்சி உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனையடுத்து கழிவு நீர் லாரி உரிமையளர்கள் சங்கத்தினர் மற்றும் ஓட்டுனர்களுடன் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா ஆலோசனை நடத்தினார். அப்போது, பொது மக்கள் கழிவு நீரை அகற்றுவதற்கு 14420 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைத்தால் முறையாக அந்த செயலி மூலம் லாரி உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

அப்போது, எந்த முகவரியில் இருந்து அழைத்தார்கள், அழைத்தவர்கள் பெயர், முகவரி மற்றும் வீட்டிலிருந்து கழிவு நீரை வெளியேற்றும் இடத்திற்கு எவ்வளவு தூரம் போன்ற விவரங்களை நகராட்சி சார்பில் வழங்கும் படிவத்தில் பூர்த்தி செய்து, அதில் ஒரு நகலை வீட்டின் உரிமையாளருக்கும், மற்றொரு நகலை நகராட்சி நிர்வாகத்திடமும் கொடுத்துவிட்டு, மற்றொரு நகலை லாரி உரிமையாளர்களும் வைத்திருக்க வேண்டும். இது தவறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கழிவு நீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு ₹300 கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் தனி நபரிடம் பணத்தை கொடுக்க கூடாது.

மேலும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை முற்றிலும் தடுக்கவும், பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தவதை கண்காணிக்கவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் 8 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி நகராட்சிப் பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகரமைப்பு ஆய்வாளர் குணசேகர், வருவாய் ஆய்வாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர் சுதர்சனன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சீனிவாசன், தட்சிணாமூர்த்தி, கோட்டீஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை கண்டறிந்தாலோ அல்லது லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீரை அகற்றினாலோ நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் அகற்றும் லாரி ஓட்டுனர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களோடு தான் அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் தண்டனையும் வழங்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா எச்சரித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், லாரி ஒப்பந்ததாரர்கள் ஜெயச்சந்திரன், சரவணன், கார்த்திக், முரளி மற்றும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

The post மனித கழிவுகளை மனிதனே அகற்றினால் கடும் நடவடிக்கை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...